×

சிவகாசி அருகே குடியிருப்புக்குள் பாம்புகள் படையெடுப்பு பொதுமக்கள் அலறல்

சிவகாசி, மார்ச் 20: சிவகாசி அருகே இ.பி.காலனியில் பல வகையான விஷ பாம்புகள் குவியல், குவியலாக இரவு நேரங்களில் ‘ஹாயாக’ சாலைகளில் நெளிந்து செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிவகாசி அருகே தேவர்குளம் ஊராட்சியில் இ.பி. காலனி உள்ளது. வளர்ந்து வரும் இந்த காலனியில் சுமார் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகள் அதிகரிக்க அதற்கு ஏற்றாற்போல் அடிப்படை வசதிகள் இந்த காலனியில் செய்து கொடுக்கப்படவில்லை. போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பல பகுதிகள் கும்மிருட்டாக காணப்படுகின்றது.

காலனியை சுற்றி புதர்மண்டிக்கிடக்கும் ஓடை பகுதிகளில் பல வகையான பாம்புகள் அடைந்து கிடக்கின்றது. புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளில் உள்ள நல்ல பாம்பு, சாரைப்பாம்பு போன்ற பல வகையான விஷ பாம்புகள் குவியல், குவியலாக இரவு நேரங்களில் காலனிக்குள் ‘ஹாயாக’ தெருக்களில் நெளிந்து செல்கின்றன. சுமார் 5 அடி நீளம் கொண்ட இந்த பாம்புகள் பல நேரம் குடியிருப்பு பகுதிகளுக்குள் வலம் வருவதால் இங்கு வசிக்கும் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் அலறி அடித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரை, உதவிக்கு அழைப்பது அன்றாட நிகழ்வாகி வருகிறது. குறிப்பாக நல்லபாம்புகள் அதிகமாக குடியிருப்புகளுக்குள் வருகின்றன. அந்த பாம்புகளால் பொதுமக்களின் உயிருக்கு அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.


இபி காலனி மாரியம்மாள் கூறும்போது, தெரு விளக்குகள் இல்லாததால் இரவு 7 மணிக்கெல்லாம் கும்மிருட்டு சூழ்ந்து விடுகிறது. இந்த வேளைகளில் பாம்புகளின் அட்டூழியமும் பெருகியுள்ளதால் பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் அடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, குடியிருப்பை சுற்றிலும் உள்ள காலியிடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுவதுதான். இங்கிருந்து வெளியேறும் பாம்புகள் தான் குடியிருப்பில் புகுந்து விடுகின்றன. அவ்வாறு வரும் பாம்புகள் வீடுகளினுள் புகுந்துவிடுகின்றது. இதனால் இரவு நேரங்களில் தெருக்களில் நடக்க பயமாக இருக்கின்றது. பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். கூடுதலாக தெரு மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags : snakes invasion ,residence ,Sivakasi ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்றி பாதை அமைக்கும் பணி தீவிரம்