×

பெரியமாரியம்மன் வீதி உலாவிற்கு தடை திருவில்லிபுத்தூரில் மக்கள் சாலைமறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

திருவில்லிபுத்தூர், மார்ச் 20: திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் வீதி உலாவிற்கு தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். திருவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா 23ம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் மார்ச் 31ம் தேதி வரை கோயில் திருவிழாக்கள், கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் பெரியமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு அனுமதி கோரி திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் மற்றும் சுரேஷ், மணிகண்டன், முத்துராஜ், சிவா, வினோத்குமரன், ஆனந்த், நல்லுசாமி உட்பட மற்றும் பலர் மீது திருவில்லிப்புத்தூர் வடக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி வேல்ராஜ் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கோயில் திருவிழாவையொட்டி 12 நாட்களிலும் ஒவ்வொரு பகுதியை சேர்ந்தவர்களுக்கு மண்டகப்படி நடத்துவது வழக்கம். எட்டாம் திருநாளான நேற்று முதலியார்பட்டி தெரு மண்டகப்படி நடைபெற வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் தடையால் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறவில்லை. அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு பெரியமாரியம்மன் வீதிஉலா வரும் என்ற அடிப்படையில் தேங்காய் பழம் மற்றும் மாலை உட்பட பல்வேறு பொருட்களை வாங்கி வைத்திருந்தனர்.

சுவாமி வீதிஉலா வராததால் ஏமாற்றம் அடைந்தனர். இதை தொடர்ந்து திருவில்லிபுத்தூர் சிவகாசி சாலையான கொலூர்பட்டி பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவில்லிபுத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தின் காரணமாக திருவில்லிபுத்தூர் சிவாஜி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : roadside protest ,
× RELATED சென்னையில் நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து அதிரையில் சாலைமறியல்