×

சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக அரசு அலுவலக கட்டிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, மார்ச் 20:  கடலாடி யூனியன் அலுவலகத்திற்கு ஒன்றியத்திலுள்ள 60 பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக அலுவலக வேலை நாட்களில் வந்து செல்கின்றனர். வளாகத்திலுள்ள வட்டார குழந்தைகள் நல அலுவலகம், வேளாண் துறை அலுவலகம் போன்றவற்றிற்கும், யூனியன் அலுவலகத்திற்கும் அலுவலர்கள், ஊழியர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோறும் பஞ்சாயத்து தலைவர்கள், உதவி தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் 1967ல் கட்டப்பட்ட பழைய யூனியன் அலுவலக கட்டிடம் வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இக்கட்டிடம் முழுமையாக சேதமடைந்ததால் 2011ல் இந்த அலுவலகம் அருகிலேயே ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் விபத்தை உணராமல் நிழலுக்காக பழைய கட்டிடம் பகுதிக்கு சென்று அமருக்கின்றனர். அலுவலகத்திற்கு வருவோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் சேதமடைந்த பகுதியில் நிறுத்துகின்றனர்.

அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்ட பயனாளிகளின் கம்பி, சிமிண்ட் போன்ற கட்டுமான பொருட்களை பழைய கட்டிடம் அருகே வைத்துள்ளனர். இதனை பெற வரும் பயனாளிகள் ஆபத்து நிலையை உணராமல் அமர்ந்து செல்கின்றனர். கட்டிடத்தின் மேற்கூரை உள்ளிட்ட அனைத்து பகுதியும் முற்றிலும் சேதமடைந்து இடியும் நிலையில் இருப்பதால் புதர்மண்டி கிடக்கிறது. இந்த கட்டிடத்திற்குள் பழைய தளவாட பொருட்கள் சிதறி கிடக்கிறது. இதனால் பாம்புகள் அதிகளவில் வசித்து வருகிறது. பொதுமக்கள் வந்து செல்லும் வேளையில் பாம்புகள் படையெடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே விபத்து  ஏற்படும் முன்பு பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் இவ்வளாகத்திற்குள் வட்டார வேளாண் துறை அலுவலகமும், அருகிலுள்ள பழைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தோட்டக்கலை அலுவலகமும் இயங்கி வருகிறது. வேளாண் அலுவலக கட்டிடம் சேதமடைந்து விட்டதால், அந்த துறை சார்பில் புதிய கட்டிடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் போதிய இடவசதியின்றி புதிய கட்டிடம் கட்டாமல் உள்ளனர்.

இந்நிலையில் கடலாடி நீதிமன்றம், கடலாடி பஞ்சாயத்திற்கு சொந்தமான சமுதாய கூடத்தில் இயங்கி வருகிறது. இதனால் ஏழை எளிய பொதுமக்கள் சுப காரியங்களை நடத்த அரசு சமுதாய கூடம் இன்றி, கூடுதல் பணம் செலவழித்து தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். எனவே சேதமடைந்து கிடக்கும் பழைய யூனியன் அலுவலக கட்டிடத்தை அகற்றி விட்டு, அந்த இடத்தில் நீதிமன்றம், வேளாண்துறை, தோட்டக்கலை அலுவலகத்திற்கு கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : public ,building ,government office building ,
× RELATED அதிகரித்து வரும் வெயில்...