×

கிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை

கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரியில், கொரோனா வைரஸ் எதிரொலியாக ஒரு கிலோ கோழி ₹10க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மாநில எல்லையோரம் 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு நோய் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டத்தில் உள்ள 22 சினிமா தியேட்டர்கள், வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு இடங்களான கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூங்காக்கள் வெறிச்சோடியுள்ளது.

இந்நிலையில், கோழி இறைச்சி உண்பதால் கொரோனா வைரஸ் பரவும் என்ற வதந்தி பரவி வருகிறது. இதனால், கோழிக்கறியை யாரும் வாங்காமல் புறக்கணித்து வருகின்றனர். கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ கோழிக்கறி ₹200க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ஒரு கிலோ ₹20க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், உயிருடன் உள்ள கோழி ஒரு கிலோ ₹150 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ₹10க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ₹5க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, தற்போது ₹2க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு விலை குறைத்து விற்பனை செய்தாலும், யாரும் அதை வாங்காமல் புறக்கணித்து வருகின்றனர். இதனால், கோழி விற்பனையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


Tags : Korina ,Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்