புதுச்சேரி லாட்ஜில் சென்னை புது மாப்பிள்ளை தற்கொலை

புதுச்சேரி, மார்ச் 20: சென்னையை சேர்ந்த புது மாப்பிள்ளை புதுச்சேரியில் அறை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்வதாக எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மகன் மதன் (23). இவருக்கும், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே மதன் புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார். இதற்காக ரெட்டியார்பாளையத்தில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை தனது நண்பர் ஒருவரின் திருமணம் நடைபெறுவதாகவும், அதற்காக காலையில் குளிரில் எழுந்து செல்ல முடியாது, இதனால் புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகில் தனது நண்பர்களுடன் லாட்ஜில் தங்கியிருந்துவிட்டு காலையில் திருமணத்திற்கு சென்றுவிடுவதாகவும் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் மட்டும் நேற்று முன்தினம் இரவு உருளையன்பேட்டையில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் மதன் லாட்ஜ் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் சென்று அறைக்கதவை தட்டினர். அப்போதும் திறக்காததால், ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மின்விசிறியில் மதன் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கினார். இதையடுத்து அவர்கள் உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சஜீத், உதவி சப் இன்ஸ்பெக்டர் இளமுருகன் தலைமையிலான போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது லாட்ஜ் அறையில் ஒரு கடிதத்தை கண்டெடுத்தனர். அதில் குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்வதாக மதன் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னையால்தான் மதன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.    

Related Stories:

>