×

கொரோனா பரவாமல் தடுக்க கலெக்டர் வேண்டுகோள்

நாகர்கோவில், மார்ச் 20: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. வரும் 10 நாட்களுக்கு மேலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.  கேரளாவில் இருந்து அதிகம் பேர் இங்கு வருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்ல மூன்று வழிகளில் சோதனை சாவடிகள் உள்ளது. அங்கு கார், பஸ் பயணிகளிடம் சோதனை நடத்தப்படுகிறது. கேரளாவில் சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் விபரம் சுகாதாரத்துறையால் சேகரிக்கப்படுகிறது. அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். எல்லையில் உள்ள சோதனை சாவடியில்  எஸ்.பி.யும் நானும்  நேரில் சென்று கண்காணித்து வருகிறோம்.  வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு உள்ள மக்கள் பற்றிய  தகவல் தெரிவித்தால் நாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம்.   24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. ஒரு டாக்டர், ஹெல்த் இன்ஸ்பெக்டர், பணியாளர்கள் 24 மணி நேரமும் அதில் உள்ளனர். 1077 என்ற எண்ணில் மக்கள் தொடர்புகொள்ளலாம். 104 மாநில தொடர்பு எண்ணாக உள்ளது.

கோயில்களில் கூட்டம் குறைந்துள்ளது. அதே வேளையில் விழாக்களை நிறுத்தி வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பூஜைகளை செய்யலாம், ஆனால் அதிக மக்கள் வரும் அளவு செய்ய வேண்டாம் என்றும் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 78 பேர் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர். 15 பேரின் சாம்பிள் பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை. தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று கண்காணித்து வருகின்றனர்.   மாவட்டத்தில் 155ல் 139 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மற்றவை மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகும். அரசு மருத்துவ கல்லூரியில் ‘ஐசோலேசன்’ வார்டில் 4 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘குவாரண்டைன்’ வார்டில் 9 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதல் நோயாளிகள் வந்தால் தங்க வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா நோய் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இதில் மக்கள் ஒத்துழைப்பு அவசியம். மக்களிடம் இதன் தீவிரம் தெரிய வேண்டும். விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வெளியே செல்லலாம், உறவினர் வீட்டிற்கு செல்லலாம் என்று  யாரும் எண்ண வேண்டாம். வீட்டில் அதிக தேவை உள்ளவர்கள் மட்டும் வெளியே செல்லுங்கள். 100 சதவீதம் மக்களில் எத்தனை சதவீதம் மக்கள் வெளியே செல்லாமல் இருக்கிறார்களோ அந்த அளவு பாதுகாப்பு உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை சென்று பொருட்கள் வாங்கும் அளவுக்கு நிலைமையை சரி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சுயமாக கை கழுவிக்கொள்ள வேண்டும். காய்ச்சல் இருந்தால் மெடிக்கலில் இருந்து மருந்து வாங்கி சாப்பிட வேண்டாம். பாராசிட்டமால் மற்றும் காய்ச்சல், இருமல் மருந்து மக்கள் சுயமாக வாங்கி சென்றால் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மெடிக்கல்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு எமெர்ஜென்சி போன்ற நிலையாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை. ஐந்து நாள் எதுவும் ஆகவில்லை, இனி ஆகாது என்று யாரும் எண்ண வேண்டாம். அரசு சொல்கின்ற கடைசி நாள், கடைசி நிமிடம் வரை மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும். இதே சூழல் மாவட்டத்தில் தொடர வேண்டும். இதுவரை வரவில்லை, இனி ஆக வாய்ப்பு உள்ளது. எனவே இனிமேலும் வரக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.   இவ்வாறு அவர் தெரிவித்தார். ‘

ரூட் மேப்’ தயாரிக்க 9 குழுக்கள் அமைப்பு
கலெக்டர் மேலும் கூறுகையில், ‘கொரோனா தொடர்பு குழு அமைக்க மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பேரிடர் காலம் போன்று இப்போது மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளது. யாராவது பாதிக்கப்பட்டவர் குமரிமாவட்டத்திற்கு வந்தால் யார் யார் அவர்களுடன் தொடர்பில் இருந்தார்கள், எந்தெந்த பாதையில் அவர்கள் சென்றார்கள் என்பதை ‘ரூட் மேப்’ ஆக தொடர்பு குழுவினர் தயாரிப்பர். யார் யார் அவர்களுடன் தொடர்பில் இருந்தார்களோ அவர்களை தொடர்பு கொண்டு கண்டறிவர். மாவட்டத்தில் 9 தொடர்பு குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. துணை ஆட்சியர் தலைமையில், தாசில்தார், பி.டி.ஒ, சுகாதாரத்துறை அதிகாரிகள் இதில் இடம்பெறுவர். அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை எந்த அலுவலக கூட்டங்களும் நடத்த கூடாது என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது  என்றார்.

‘போராட வேண்டிய நேரம் இது இல்லை’
கலெக்டர் மேலும் கூறுகையில், ‘ஈரானில் உள்ள மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் உள்ள சூழல், இங்குள்ள சூழல் பார்த்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் உள்ள நமது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை உள்ளது. இப்போது கொரோனா மூலம் பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்று பார்க்கப்படுகிறது. இந்த மாதிரி அவசர காலங்களில் மக்கள் கூட்டமாக எந்த செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம். போராட வேண்டிய நேரம் இது இல்லை. அரசின் கவனத்தை ஈர்க்கத்தான் போராட்டம் என்றால் அரசின் கவனத்திற்கு இந்த விஷயம் ஏற்கனவே வந்துவிட்டது. குமரி மாவட்ட மக்களின் பிரச்னைகள் குறித்த அரசின் முயற்சிகளுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றார்.

சுய உதவிக்குழு தயாரிப்பில் ‘சானிட்டைசர்’
கலெக்டர் கூறியதாவது: மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கின்ற ‘சானிட்டைசர்’, ‘ஹேண்ட்வாஷர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் இதனை விற்பனை செய்ய உள்ளோம்.  விற்பனை விலை நிர்ணயம் செய்யப்படும். வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் கிராமங்கள் வாரியாக முக்கிய இடங்களில் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : corona spread ,
× RELATED ஜேஎன்.1 வகை கொரோனா பரவலா? பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்