×

முத்துப்பேட்டை பேரூராட்சியில் ஒத்தி வைக்கப்பட்ட 7 குளங்கள் மீண்டும் ஏலம்

முத்துப்பேட்டை, மார்ச் 20: முத்துப்பேட்டை பேரூராட்சியில் ஒத்திவைக்கப்பட்ட 7 குளங்கள் மீண்டும் ஏலம் விடபட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முன்பு நூறு குளங்கள் இருந்தன. இதனை மக்கள் மறந்துவிடக்கூடாது என்று முன்னோர்கள் நினைத்தார்களோ, இல்லையோ கடைசி நூறாவது குளத்திற்கு நூறாம் குண்டு குளம் என்று பெயரிடப்பட்டது. ஆனால் தற்பொழுது முத்துப்பேட்டை பேரூராட்சியில் மங்களூர் ஏரி மற்றும் 42 குளங்கள் மட்டுமே உள்ளன. நீண்டகாலமாக முறையான பராமரிப்பு இல்லாததால் இவையனைத்தும் தூர்ந்து வருகின்றன. இதில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் சுருங்கிகொண்டே போகிறது. சில குளங்கள் மாயமாகிவிட்டது. ஆரம்ப காலத்தில் நூற்றுக்கணக்கான குளம் குட்டைகள் இப்பகுதியில் இருந்தபோதிலும் படிப்படியாக பாதிக்குமேல் ஆக்கிரமிப்பில் காணாமலே போய்விட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அடிபம்புகளில் கூட தண்ணீர் வருவதில்லை. சில ஆண்டுகளாக தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டம் கடும் வறட்சியின் பிடியில் சிக்கி வருவதால் முத்துப்பேட்டை பகுதி முழுவதும் தண்ணீர் இன்றி மக்கள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் ஆயிரத்து 230மிமீ மழைபெய்துள்ளது. நடப்பாண்டில் வெறும் 611 மிமீ என மழையளவு பாதியாக குறைந்து விட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் இவற்றை சேமித்து தேக்கிவைக்க வழியின்றி குளங்கள் நீர்நிலைகள் குப்பைதொட்டியாக மாறிவிட்டன. குறிப்பாக முத்துப்பேட்டை பகுதியும் அடங்கும். அதேபோல் முத்துப்பேட்டை பகுதியில் சமீபத்தில் தாக்கிய கஜா புயலின் கோரதாண்டவத்தால் ஒற்றுமொத்ததையும் சுருட்டி வாரி போட்டதில் லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்து கிராமங்கள் பாலைவனம் போல காட்சி அளிக்கிறது. இதனால் வெயில் தாக்கமும் தற்பொழுது அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சி பராமரிப்பில் உள்ள பட்டறைக்குளம், தாமரைகுளம், அய்யனார்குளம், பெருமாள்குளம், சித்தேரிகுளம், அரசக்குளம், செக்கடிக்குளம், அரபுசாபள்ளிகுளம், சேத்துகுளம், புதுக்குளம், சில்லாடிகுளம், கால்நடை ஆஸ்பத்திரிகுளம், சத்திரகுளம், வௌ்ளக்குளம், மாங்குளம், சொரிக்குளம், பூவன்குளம், எடையன்குளம், பந்தலடிதிடல் குளம் மற்றும் முங்கன்குட்டை, நாடிக்குட்டை, மயானகுட்டை, கொய்யாமரத்து குட்டை, வண்ணாரகுட்டை, ஜானகிகுட்டை என பேரூராட்சி பராமரிப்பில் உள்ள குளமனைத்துமே ஆக்கிரமிப்பட்டுள்ளது. மேலும் அனைத்து குளங்களில் குப்பைக்கழிவுகள் குவிக்கபடுவதோடு குடியிருப்புகளிலிருந்து கழிவுநீரும் அதில் திறந்துவிடபடுகிறது. இதனால் குளங்கள் பல கழிவுநீர் குட்டைகளாவும் உருமாறிவிட்டன. இதில் சில ஆண்டுகளுக்கு முன் சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பால் பட்டறைகுளம், செக்கடிக்குளம் உள்ளிட்ட குளங்களில் மேற்கொள்ளபட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளும் பாதியிலேயே நிறுத்தபட்டுவிட்டன.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் 200, 300க்கும் ஏலம் போன குளங்கள் இருபது ஆயிரம் வரையிலும், 40 ஆயிரம் வரை ஏலம் போன குளங்கள் சென்றாண்டு 1.20 லட்சம் வரை வரலாறு காணாத வகையில் ஏலம் போனது. அதேபோல் இந்தாண்டும் இதுபோன்று ஏலம் நடைபெறும் என்று நினைத்து இருந்த நிலையில் கடந்த மாதம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் தேவராஜ் தலைமையில் குளம் மீன் பாசி குத்தகை ஏலம் விடப்பட்டது. அதனால் ஏராளமான ஏலதாரர்களும் வந்திருந்தனர். சிறு சிறு குளங்கள் வருமானம் குறைவான குளங்கள் சென்றாண்டை விட சிறு தொகை கூடுதலாக ஏலம் போன நிலையில், சென்றாண்டு ஒரு லட்சத்திற்கு மேல் ஏலம் போன பட்டறைகுளம், செக்கடிகுளம், அரசகுளம் பேட்டை தாமரைக்குளம் போன்ற குளங்களுக்கு அரசு நிர்ணையம் செய்த ரூபாயிக்கு யாரும் ஏலம் கேட்க முன்வரவில்லை. இதனால் 10 குளங்கள் ஏலத்தை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சென்ற வாரம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட குளங்கள் ஏலம் விடபட்டது. இதில் மூன்று குளங்கள் மட்டுமே ஏலம் போன நிலையில் நேற்று மீண்டும் 7குளங்களின் ஏலம் விடப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக அதிகளவில் யாரும் வரவில்லை.

Tags :
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: திருச்சி...