×

மகா மாரியம்மன் கோயில் திருவிழா ஒத்திவைப்பு

வலங்கைமான், மார்ச் 19: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பங்குனி பாடைக்காவடி திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியால் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறநிலையத் துறையால் அறிவிக்கப்ட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி வரதராஜம் பேட்டைத் தெருவில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் சக்திஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படும் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 8ம்தேதி முதல் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றதை இதையடுத்து 15ம் தேதி இரண்டாவது காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து மாலை அம்மன் வீதியுலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பாடைக்காவடி திருவிழா வரும் 22ம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் பாடைக்காவடி திருவிழாவும், மார்ச் 29ம் தேதி புஷ்பபல்லாக்கும், ஏப்ரல் 12ம் தேதி கடை ஞாயிறு விழாவும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகஅரசால் தேசிய பேரிடர் என்று அறிவிக்கப்பட்டு அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாகவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று (18ம்தேதி) முதல் இக்கோயிலில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் திருவிழா தேதிகள் பின்னர் அறிவிக்கப்டும் என இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஆலய செயல் அலுவலர் சிவக்குமார், தக்கார் ரமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags : festival ,Maha Mariamman Temple ,
× RELATED ஊட்டச்சத்து மாத விழா