×

சாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி

கும்பகோணம், மார்ச் 19: சாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி சுவாமிமலை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை பெட்டியை உடைத்து நகைகள் சரியாக இருக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நகைக்கடன், விவசாய கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 2018ம் ஆண்டு விவசாயிகள் வைத்துள்ள நகைகளில் முறைகேடு நடந்துள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முன்னாள் செயலாளர் செல்வம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுபோல் ஏராளமான விவசாயிகள், பல லட்ச ரூபாய் நகைகளை அடகு வைத்து விட்டு திருப்ப முடியாமல் இருந்த நிலையில் சங்க முன்னாள் செயலாளர் செல்வம் மீது கூட்டுறவு சங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்பின்னர் முன்னாள் செயலாளர் செல்வம் தலைமறைவானார். இதையடுத்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் செல்வத்தை சுவாமிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியில் உள்ளார்.

அதன்பின் முன்னாள் செயலாளர் செல்வம், சுவாமிமலை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் உள்ள நகை பெட்டியின் சாவிகள் என்னிடம் கிடையாது. அனைத்து சாவிகளையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டேன் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்கருதி நகை பெட்டியை திறந்து ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டுமென கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறினர். இதையேற்று கொண்ட நீதிபதி, அனைத்துத்துறை அதிகாரிகளை கொண்டு குழு அமைத்து நகைப்பெட்டியை திறந்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் மாரீஸ்வரன், மாவட்ட துணை ஆட்சியர் (கலால்) ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள், வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்டவர்களை குழுவாக அமைத்து நகை பெட்டியை உடைத்து நகைகள் சரிபார்க்கும் பணி துவங்கியது. இதுகுறித்து கிராமப்புற நுகர்வோர் சங்க செயலாளர் விமலநாதன் கூறுகையில், சுவாமிமலை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைகள், வீட்டு பத்திரம், விவசாய கடன்களை வைத்தவர்கள் திருப்ப முடியாமல் கடந்த 2 ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். எனவே நகைகளை அடமானம் வைத்தவர்களுக்கு நகைகளுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். 2 ஆண்டுகளாக பணத்தை வைத்து கொண்டு தவித்தவர்களுக்கு நகைக்கான வட்டியை கூடுதலாக சேர்த்து வழங்க வேண்டும். முன்னாள் செயலாளர் செல்வம் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது