×

ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட கல்வித்துறை உத்தரவு

புதுச்சேரி, மார்ச் 19:    கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 31ம் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் தர மேம்பாட்டை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் ருத்ர கவுடு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கீழ்க்கண்ட கல்வி தொடர்பான நடவடிக்கைகளை மேற்ெகாள்ளுமாறு பள்ளிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (19ம் தேதி) மத்திய அரசின் கல்வி தரவு தளமான யூடைஸ் பிளஸ் (UDISE+) தரவு தளத்தில் பள்ளி தொடர்பான தரவுகளை சரிபார்த்து, திருத்தங்கள் செய்தல் மற்றும் மத்திய அரசின் தர மேம்பாட்டு தரவு தளமான `ஷாலா சித்தி’ (SHAALA SIDDHI) தரவு தளத்தில் சுய மதிப்பீடு மற்றும் வெளி மதிப்பீடு செய்ய வேண்டும். 20ம் தேதி `டீல்’ (DEAL) முடிவுகளையொட்டி மாணவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்தல், மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்தி திட்டங்களை வகுக்க வேண்டும்.

23, 24 ஆகிய தேதிகளில் பள்ளியின் பதிவேடுகளில் உள்ள பதிவுகளை சரி பார்த்து திருத்தங்கள் செய்ய வேண்டும். 24, 25, 26 ஆகிய தேதிகளில் பள்ளி இடம் பெற்றுள்ள வட்டாரத்தில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு செய்தல், கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வு தொடர்பான செயல்களை செய்தல், 2020-21ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

30, 31ம் தேதிகளில் மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்யும் தேசிய அடைவு தேர்வுகளை எதிர்கொள்ள உருவாகி வரும் வினா வங்கிக்கான வினாக்களை விரைவு செய்ய வேண்டும். மேலும், ஆசிரியர்கள் தங்கள் கணினி பயன்பாட்டு திறனை வளர்த்து கொள்ள ஐசிடி ஆய்வகத்தில் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்து கொள்ளுதல், தீக்ஷா (DIKSHA), என்.ஆர்.ஓ.ஈ.ஆர். போன்ற இணையதளங்களின் வாயிலாக இணையவழி கற்றல் நிகழ்வுகளில் சேர்ந்து சான்றிதழ் பெறுதல், கற்றல் கற்பித்தல் துணை கருவிகள் செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டும்.அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், தங்கள் பள்ளிகளில் நடைபெறவுள்ள மேற்கூறிய நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை பின்னர் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Department of Education ,teachers ,
× RELATED 10, +1 மாணவர்களுக்கு அவர்கள் பயிலும்...