×

கரூர் நகராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மும்முரம்

கரூர், மார்ச் 19: கரூர் நகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் எதிரொலியால் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரசுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் சுமார் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஆந்திரா, அரியானா, டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, காஷ்மீர், லடாக், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய 16 மாநிலங்களில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதில் 3 மாநிலங்களில் மட்டும் மொத்தம் 3 பேர் கொரானாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவை விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா எதிராலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. கோயில்களில் தரிசனம் கிடையாது. கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. கரூர் நகராட்சியில பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், கோயில்கள், கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் கடைவீதி உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தாந்தோணிமலை, வெங்கமேடு பகுதியிலும் வாகனங்களின் மீது மருந்து தெளிக்கப்படுகிறது. இதற்காக 24 ஸ்பிரே இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து கரூர் நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரியா கூறுகையில், நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கூடும் இடங்களில் குறைந்தபட்சம் ஐந்து முறை கிருமி நாசினி ஸ்பிரே செய்யப்படுகிறது. இதனை தெளிக்கும் ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை வழங்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் பேருந்துகள் மீது கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்படுவதாக கூறினார். உழவர்சந்தை: கரூர் உழவர்சந்தைக்கு காய்கறிகளை வாங்குவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா தாக்குதலை சமாளிக்கும்வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வழக்கத்தை விடஅதிகமாக மக்கள் வருகின்றனர். உழவர்சந்தை அலுவலர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்தும், வரும் பொதுமக்களின் கைகளில் மருந்து ஸ்பிரே செய்தும் வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் இப்பணியினை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur ,municipality ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்