×

குமரி முழுவதும் பொது இடங்களில் கைகளை கழுவ ஏற்பாடு வர்த்தக நிறுவனங்கள் மூடலால் வீதிகள் வெறிச்சோடின

நாகர்கோவில், மார்ச் 19:  குமரி மாவட்டத்தில் கைகளை கழுவுவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் களமிறங்கி உள்ளன. வர்த்தக நிறுவனங்கள் மூடலால் பல வீதிகள் வெறிச்சோடின. குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறை சார்பில் ஆங்காங்கே கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ், கைகள் மூலமாகவே 80 சதவீதம் வரை பரவுகிறது என்பதால், கைகளை கழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளும் களமிறங்கி உள்ளன. எஸ்.பி. நாத் உத்தரவின் பேரில் காவல்துறையினரும் கைகளை கழுவுதல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள். வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று, கைகளை கழுவ காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏ.எஸ்.பி. ஜவகர், இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர், எஸ்.ஐ. அனில்குமார் ஆகியோர் கைகளை கழுவும் முறைகள் குறித்து பயணிகளிடம் விளக்கினர். இதே போல் போலீஸ் நிலையங்களிலும், கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்கள் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே காவல் நிலையத்துக்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். போலீஸ் நிலையங்களில் பணியில் இருக்கும் போதும், ரோந்து பணிக்கு செல்லும் போது போலீசார் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதே போல் மாநகராட்சி சார்பிலும் முக்கிய சந்திப்புகளில் கைகளை சுத்தம் செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் விடுமுறையில் உள்ளதால், பொது இடங்களில் இதற்கான முகாம்கள் நடக்கின்றன. ஒரு நாளைக்கு 15 முறை கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும் என்று, பொதுமக்களை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று கைகளை கழுவ வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள் மற்றும் முக்கிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால், நாகர்கோவிலில் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடி உள்ளன. கோர்ட் ரோடு, செட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மாலையில் ஷாப்பிங் செல்வது குறைந்து இருப்பதால் போக்குவரத்து நெருக்கடியும் பெரிய அளவில் இல்லை. இதே போல் திருநெல்வேலி, திருவனந்தபுரம் செல்லும் பஸ்களிலும் பெரிய அளவில் கூட்டம் இல்லை. அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி உள்ளன. காய்கறி சந்தைகள், பழக்கடைகள், மெடிக்கல் ஸ்டோர், நகை கடைகள், செல்போன் கடைகளில் உள்ள பலரும் முக கவசம் அணிந்துள்ளனர். பொதுமக்கள் பலரும் முக கவசம் அணிந்து சென்றதை காண முடிந்தது. இளம்பெண்கள் பலர் துப்பட்டா மூலம் முகத்தை மூடியவாறு பைக், பஸ்களில் பயணித்தனர்.

ஆவின் ஊழியர்களுக்கு முக கவசம்
குமரி மாவட்ட ஆவின் ஊழியர்களுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி, நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஆவின் பாலகத்தில் நேற்று காலை நடந்தது. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் முக கவசங்களை வழங்கினார். மாவட்ட  பால் வள தலைவர் அசோகன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அதிமுகவினர், ஆவின் ஊழியர்களுக்கு வழங்க வைத்திருந்த முக கவசத்தை எடுத்து மாட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

Tags : Businesses ,area ,places ,Kumari ,streets ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...