×

கொரோனா வைரஸ் எதிரொலி பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்

வேலூர், மார்ச் 19: கொரோனா எதிரொலியாக பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவில் தொடங்கி 24 நாடுகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நோய்தொற்று பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை அனைத்து வகை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்குரிய தேர்வு பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அன்றாடம் பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மேற்கொண்டு சுகாதாரமாக இருக்கவும், அவ்வப்போது தங்கள் கைகளை உரிய கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு தூய்மை படுத்தி கொள்ளவும். இதற்கு தேவையான சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் போன்ற பொருட்களை பள்ளிகளில் தனி கட்டண நிதி அல்லது பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது 10, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தேர்வு நாளன்று நகராட்சி, மாநகராட்சி மற்றும் பொது சுகாதார அலுவலர்களை கொண்டு தேர்வு அறைகளில் தேர்வு துவங்குவதற்கு முன்பதாக கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக மாணவர்களை கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும் என தேர்வு மைய பள்ளியின் தலைமை ஆசிரியர், தேர்வு மைய முதன்மை தேர்வு கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : centers ,elections ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...