×

வள்ளியூரில் விதிகளை மீறி அதிவேகமாக டூவீலரில் பறக்கும் சிறுவர்கள்

வள்ளியூர், மார்ச் 19:  வள்ளியூர் நகர பகுதியில், சமீபகாலமாக டூவீலர்களில் சிறுவர்கள் அதிவேகமாக செல்வது தொடர் கதையாகி இருக்கிறது. போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ‘சர்ர்’ என பறக்கும் இருசக்கர வாகனங்களால் பாதசாரிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுகின்றனர். எதிரே பைக், ெமாபட்டில் வருவோர், வேகமாக வரும் வாகனங்கள் மோதி விடுமோ என்ற அச்சத்தில் ஓரம்கட்டி நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. டூவீலர் ஓட்டுவதற்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். 2 நபர்களுக்கு மேல் செல்ல கூடாது. ஆபத்தை எற்படுத்தும் பொருட்களை டூவீலரில் கொண்டு செல்லக் கூடாது என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் இருந்தாலும், அவற்றை காற்றில் பறக்கவிட்டு காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் கேன் உள்ளிட்ட பொருட்களை டூவீலரில் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர்.

பெரும்பாலான வீடுகளில் பெற்றோரே டூவீலர்களை சிறுவர்கள், சிறுமிகளை ஓட்ட அனுமதிக்கின்றனர். பள்ளி மாணவர்கள், ஹெல்மெட் போடாமலேயே டூவீலரில் பறக்கின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், டூவீலர்கள் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. ஒவ்வொருவரும் போட்டிப்போட்டு வேகமாக செல்வதால் பாதசாரிகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே வள்ளியூர் நகர வீதிகளில் போலீசார் அடிக்கடி வாகன சோதனை நடத்தி போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறார்கள் டூவீலர் ஓட்டி வந்து பிடிபட்டால் அவர்களது பெற்றோரை அழைத்து எச்சரிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : boys ,Valliyur ,
× RELATED ஆட்டையாம்பட்டி அரசு பள்ளியில் நூதனம்...