×

குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி சங்கரன்கோவிலில் நகராட்சி முற்றுகை

சங்கரன்கோவில், மார்ச் 19: சங்கரன்கோவிலில் குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் திருவள்ளுவர் நகர் பகுதியில், 16 நாட்கள் ஆகியும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த முறை குடிநீர் விநியோகித்த போது, ராஜபாளையம் சாலையில் பல்வேறு பணிகளுக்காக குழிகள் தோண்டியதால், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அது சரிசெய்யப்பட்டு வழக்கத்தைவிட 3 நாட்கள் கழித்தே குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது 16 நாட்கள் ஆன நிலையில், மீண்டும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், 4 நாட்கள் கழித்தே குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் நகராட்சி தெரிவித்து உள்ளது.
மேலும் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆனால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இப்பகுதியில், பெரும்பாலானோருக்கு குடிநீர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ராஜபாளையம் சாலையில் உள்ள பகிர்மான குழாய் உடைப்பை உடனே சரி செய்து திருவள்ளுவர் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாரதிய மஸ்தூர் சங்க செயலாளர்  பாடலிங்கம்  தலைமையில் நேற்று  நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் முன்னாள் கவுன்சிலர் முப்பிடாதி மற்றும் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவரக்ள், குடிநீர் வழங்க கோரி கோஷங்களையும் எழுப்பினர். தகவலறிந்து நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், மேலாளர் லட்சுமணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மதியத்திற்குள் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு உடனே குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Sankarankoil ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...