×

வடக்கன்குளம் அருகே பஞ். மாற்றம் கண்டித்து கோயிலில் சாமி கும்பிட்டு மக்கள் நூதன போராட்டம்

பணகுடி, மார்ச் 19:  வடக்கன்குளம் அருகே வார்டு மறுவரையறையில் பஞ்சாயத்து மாற்றம் கண்டித்து கோயிலில் சாமி கும்பிட்டு 100க்கும் மேற்்பட்ட மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கன்குளம் அருகே உள்ள சிதம்பரபுரம் பஞ்சாயத்தில், ஒரு பகுதியில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை வார்டு மறுவரையறைப்படி பழவூர் மற்றும் ஆவரைகுளம் பஞ்சாயத்துகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு பழவூர், ஆவரைகுளத்துக்கு அலைக்கழிக்கப்படுவோம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த மக்களவை தேர்தலின்போதும் வார்டு மறுவரையறையின் படியே தேர்தல் நடந்த நிலையில், பஞ்சாயத்து வார்டுகள் பிரிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

மேலும் எங்களது பகுதியை இரு பஞ்சாயத்துகளில் சேர்ப்பது தொடர்பாக இதுவரை எங்களிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் வார்டுகளை பிரிப்பது எப்படி என தெரியவில்லை. தற்போது இருக்கும் பஞ். வார்டிலேயே எங்களது பகுதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், என்றனர். இதனிடையே வார்டு மறுவரையில் கருத்துகளை கேட்காமல் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக புகார் தெரிவித்து இப்பகுதி மக்கள், 100க்கும் மேற்பட்டோர் இங்குள்ள செல்லமாகாளியம்மன் கோயிலில் அம்மனை கும்பிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை இந்த போராட்டம் நடந்தது. தங்களது கோரிக்கைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags : Panj ,Vadakkankulam ,protest ,Sami ,
× RELATED அடிப்படை உரிமைகளை நிறைவேற்றாததை...