×

புழல் அருகே கழிவுநீர் கால்வாயாக மாறிய மழைநீர் கால்வாய்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புழல்: புழல்  மழை நீர் கால்வாய் கழிவு நீர் கலக்கும் கால்வாயாக மாறி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மாதவரம் மண்டலம் 25வது வார்டு புழல் அடுத்த கதிர்வேடு கட்டிட தொழிலாளர் நகர் அருகில் சுமார் 80 அடி அகலத்தில் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் மழைக்காலங்களில் சேரும் மழைநீர் மாதவரம் ரெட்டேரி பகுதிக்கு சென்றடையும். தற்போது இந்த மழைநீர் கால்வாய் உரிய பராமரிப்பு இல்லாததால் இரண்டு பக்கங்களிலும் கரைகள் இல்லாததாலும் கட்டிட தொழிலாளர்கள் நகர் பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பகுதிகளில் சேரும் குப்பைகள் மற்றும் அருகில் உள்ள நகர் பகுதியில் சேரும் குப்பைகளை அப்பகுதி மக்கள் இந்த மழைநீர் கால்வாயில் வீசுகின்றனர். இதனால் கால்வாயில் உள்ள நீரின் நிறம் பச்சையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அருகில் உள்ளவர்கள் மற்றும் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் கட்டிட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் கரை இல்லாததால் இரவு நேரங்களில் சென்று வரும் பொதுமக்கள் ஒரு சில நேரங்களில் நிலை தடுமாறி மழைநீர் கால்வாயில் விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.  எனவே இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் கால்வாய் இரண்டு பக்கங்களிலும் கரைகளை அமைத்து இதில் குப்பைகளை கொட்டி வருபவர்களை கண்காணித்து உரிய அபராதம் விதிக்க வேண்டும்.  மழைக்காலங்களில் கழிவுநீர் இரட்டை ஏரியில் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : canal ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்