×

பராமரிப்பு இல்லாத பூண்டி நீர்த்தேக்கம்

திருவள்ளூர், மார்ச் 19: பூண்டி நீர்த்தேக்க பூங்கா பராமரிபு இல்லாததால் திறந்த வெளி பாராக மாறியுள்ளது. கலை அம்சங்கள் சிதைந்துள்ளது. இவற்றை மீண்டும் சீரமைத்து சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் தற்போது 76வது ஆண்டு நெருங்க உள்ள நிலையில், இங்குள்ள பூங்காக்கள் பராமரிப்பின்றி ‘’பார்’’ ஆக மாறி சீரழிந்து வருகிறது. சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்த்து வைக்கும் பூண்டி நீர்த்தேக்கம், துவக்கத்தில் முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்ததால், பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலாத் தலமாகவும், பண்டிகை, விடுமுறை நாள்களில் தமிழகம் முழுவதுமுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடமாகவும் விளங்கியது.சென்னை பொதுப்பணி துறையினரால் ரூ.65 லட்சம் மதிப்பில் கடந்த 1940ம் ஆண்டு சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. 16 பெரிய மதகுகளைக் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி. 34.98 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 138 அடியும், ஏரியின் நீர்மட்ட உயரம் 35 அடியாகவும் அமைக்கப்பட்டது.1944ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தை ஜூன் 14ம் தேதி அப்போதைய சென்னை மேயராக இருந்த ஆர்தர் ஹோப் திறந்து வைத்தார். தற்போது பூண்டி ஏரி
76 வது ஆண்டை நெருங்க உள்ளது.

இங்கு அழகிய கலைநயங்களுடன் கூடிய சிலைகள், இருக்கை வசதிகளுடன் கூடிய கண் கவர் பூங்காக்கள், சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், ராட்டினம், சறுக்குமனை, இருக்கைகள், குடிநீர் குழாய்கள், அழகிய வண்ணங்களுடன் கற்சிலைகளால் ஆன பாம்புப் பண்ணை, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய தொல்லியல் அகழ் வைப்பகம், நீர் நிலையியல் ஆய்வுக்கூடம் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை விளங்கியது.
சென்னைக் குடிநீரின் பயன்பாடு உள்ள ஏரியை சுற்றுலாத் தலமாக அனுமதிக்க முடியாது என்ற காரணத்தாலும், பூண்டி ஏரியின் கலை அம்சத்தை முறையாகப் பராமரிக்காமல் அதிகாரிகள் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
பூண்டியில் ஏற்கனவே இருந்து, தற்போது சிதைந்துப் போன அம்சங்களை பழைய கலைநயத்துடன் சீரமைக்க வேண்டும். பூண்டியில் உள்ள நீர்நிலை ஆய்வகத்தில், மேட்டூர், பூண்டி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நீர்த் தேக்கங்களின் மாதிரிகள் அடங்கிய ஆய்வகத்தையும், தொல்லியல் அகழ் வைப்பகத்தையும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற கல்விச் சுற்றுலா மையமாக அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும்.சிதைந்துள்ள பாம்புப் பண்ணையை சீரமைத்து, மக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும். பூங்காக்களில் உடைந்துள்ள சிலைகளை சீரமைத்தல், சிறுவர்களின் பொழுதுபோக்கான ஊஞ்சல், ராட்டினம், சறுக்குமனை உள்ளிட்டவைகளை நவீன வசதிகளுடன் ஏற்படுத்த வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்காக ஆங்காங்கே கழிவறைகள், குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும். வயதானவர்கள் இளைப்பாற சாலையோரம் நிழற்குடையுடன் கூடிய இருக்கைகளை அமைக்க வேண்டும். பூங்காக்களில் மதுபானப் பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதைத் தடுக்கும் வகையில் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களை தேவைக்கேற்ப நியமிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையினரும், சுற்றுலாத் துறையினரும் இணைந்து மேற்கொண்டால் திருவள்ளூர் மாவட்டத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக பூண்டி நீர்த்தேக்கம் விளங்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Tags : Poondi ,reservoir ,
× RELATED 10 நாட்கள் குடிநீரின்றி தவிப்பு; காலி...