×

ஹால் டிக்கெட் வாங்க வந்தபோது விபரீதம் பூண்டி‘லிங்க்’ கால்வாயில் குளித்த 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி பலி

திருவள்ளூர், மார்ச் 19:  பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் பாய்ந்து வருகிறது. இங்கிருந்து, சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்க்க வினாடிக்கு 430 கன அடி  கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்படுகிறது.  தற்போது லிங்க் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோர கிராம இளைஞர்கள் ஆபத்தை உணராமல் டைவ் அடித்து குளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று திருவள்ளூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் வெள்ளவேடு சண்முகம் மகன் சரவணன்(15),  திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை கார்த்திக்ராஜா மகன் குபேந்திரராஜ்(15) உட்பட அவரது நண்பர்கள் 9 பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக ஹால் டிக்கெட் வாங்க பள்ளிக்கு வந்தனர். ஹால் டிக்கெட் வாங்கிய அவர்கள், பூண்டி ஏரிக்கு சென்றனர். அங்கு ஏரியை ரசித்துவிட்டு, லிங்க் கால்வாய் வந்தனர். அங்கு, அனைவரும் குளிப்பதென முடிவு செய்து, தங்களது ஆடைகளை கழற்றி கரை மீது வைத்துவிட்டு குளிக்க கால்வாயில் குதித்தனர்.

அப்போது, சேற்றில் சிக்கிய சரவணன், குபேந்திரராஜ் ஆகிய இருவரும் வெளியே வராததால், உடன் குளித்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.   அவ்வழியாக சென்றவர்கள் அலறல் சத்தம் கேட்டு, கால்வாய்க்கு வந்தனர். அப்போது இரு மாணவர்கள் நீரில் மூழ்கியது கண்டு திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் புல்லரம்பாக்கம் போலீசார் விரைந்துசென்று, சேற்றில் சிக்கிய இரு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். அவர்களை கால்வாயில் தேடிக்கொண்டிருந்த மற்ற மாணவர்களையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இரு சடலங்களையும் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனைத்து மாணவர்களின் பெற்றோர்களையும் போலீஸ் நிலையம் வரவைத்து, அவர்களது பிள்ளைகளை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றார்.

Tags : canal ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்