×

சிவகாசி சிவன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி இழுத்தடிப்பு பக்தர்கள் அதிருப்தி

சிவகாசி, மார்ச் 19: சிவகாசி சிவன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்க தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகள் தொடங்காமல் உள்ளனர். இதனால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசி நகரின் மைய பகுதியில் சிவன் கோவில் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோவில் ஒன்றரை ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் கருவறையில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சிலைகள் உள்ளன. வெளி பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விநாயகர், தட்சணாமூர்த்தி, துர்க்கைஅம்மன், பைரவர், 63 நாயன்மார்கள் சிலைகள், நவகிரகங்கள் அமைந்துள்ளன.

சிவன்கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் நடைபெறும். இது தவிர சோமவார பூஜை, 1008 சங்காபிசேகம், பிரதோஷம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும். முக்கிய திருவிழா நாட்களில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் தங்க தேர், மற்றம் சட்ட தேரில் நகர் வலம் வருவர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். சிவன் கோவில் நுழைவு வாயில் பகுதியில் தற்போது சிறிய கோபுரம் மட்டுமே உள்ளது. இங்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தெய்வீக பேரவை சார்பில் 60 அடி உயர்த்தில் கோபுரம் கட்ட அறிநிலைய துறையினரிடம் அனுமதி கேட்டனர். அப்போது கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருந்ததால் கடை உரிமையாளர்கள் கோபுரம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபுரம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது தமிழக அரசு சிவகாசி நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்க சிறப்பு நிதியாக ரூ.3 கோடி வழங்கியுள்ளது. ஆனால் சிவன் கோவில் முன்புள்ள ஒரு கடை உரிமையாளர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்று கடையை காலி செய்ய மறுத்து வருகிறார்.

இதனால் ராஜகோபுரம் அமைக்கும் பணிக்கு தடை ஏற்பட்டுள்ளது. கோவிலின் முன்புள்ள அனைத்து கடைகளையும் விரைந்து காலி செய்து ராஜகோபுரம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி சிவன் கோவில் மிகவும் பழைமையானது. இங்கு போதிய இடவசதி இருந்தும் இதுவரை ராஜகோபுரம் அமைக்கப்படவில்லை. ஆனால் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவில்லிபுத்தூர் மடவார்குளம் சிவன் கோவில், சிவகாசியில் உள்ள மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோவில்களில் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. எனவே விரைவில் சிவன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Pilgrims ,Sivakasi Shiva Temple ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்