×

கொரோனா வைரஸ் பீதி பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய வீரராகவ பெருமாள் கோயில்

திருவள்ளூர், மார்ச் 19: கொரோனா வைரஸ் பீதியால், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோயிலில் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், நாள்தோறும் திருவள்ளூர் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதுமட்டுமல்லாது அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வதும் வழக்கமாக உள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவும் தப்பவில்லை. தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அடையாளம் காணப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிட்டது. ஒரு சில உள்ளூர் பக்தர்கள் மட்டும் வந்து செல்கின்றனர். இவ்வாறு, திருவள்ளூரில் அதிகளவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கூடும் இடமான, வீரராகவ பெருமாள் கோயிலில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும், கோயில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : warrior ,Perumal Temple ,coronavirus victims ,
× RELATED தலசயன பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்சவம் நிறைவு