×

நகராட்சி மார்க்கெட்டில் பொது மக்கள் பயன்படுத்தாத நுழைவு வாயில்கள் மூடல்

ஊட்டி,  மார்ச் 19:  கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக ஊட்டி மார்க்கெட் வளாகத்தை  சுகாதாரமாக வைத்து கொள்ளும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும்  நுைழவு வாயில்கள் தவிர மற்ற நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா  வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் ஊட்டி மார்க்கெட்  வளாகத்தை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி  நிர்வாகம் எடுத்துள்ளது.
 இதன் ஒருபகுதியாக மார்க்கெட் வியாபாரிகளுக்கு  சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டம் ஊட்டி மார்க்கெட்  வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊட்டி நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமை  வகித்தார். இதில் நகராட்சி நகர்நல அலுவலர் முரளி சங்கர் முன்னிலை வகித்து  பேசியதாவது: ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் சுமார் 1200க்கும்  மேற்பட்ட கடைகள் உள்ளன. கடை வைத்துள்ளவர்கள், வேலை செய்பவர்கள் என சுமார் 3  ஆயிரம் பேர் மார்க்கெட்டில் உள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு சுமார் 15  ஆயிரம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத  வகையில் பல்வேறு தூய்மை பணிகள் தினமும் மேற்கொள்ளப்படுகிறது.  இந்நிலையில்  மார்க்கெட்டை முழுமையாக மூடினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்  என்பதால், மார்க்கெட்டிற்கு வரக்கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில்  மக்கள் அதிகம் பயன்படுத்தும் நுழைவுவாயில்களை தவிர இதர சிறு சிறு வழிகளை  மூட வியாபாரிகள் சங்கத்துடன் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து  மக்கள் வந்து செல்லும் முக்கிய நுழைவு வாயில்களில் பொதுமக்கள் மற்றும்  வியாபாரிகள் தங்களது கைகளை சுத்தமாக கழுவ வசதி செய்யப்பட்டுள்ளது.

 எனவே  பொதுமக்கள் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மார்க்கெட்டில் கடை வைத்துள்ள  வியாபாரிகள் தங்கள் கடைகளை சுற்றிலும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.  மேலும் அவர்கள் நாள் ஒன்றுக்கு 5 முறை தங்களது கைகளை கழுவ வேண்டும். சளி,  இருமல் போன்ற அறிகுறிகளுடன் யாரேனும் வந்தால், அவர்களை உடனடியாக  மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும். கடைகளில் பணியாற்றும்  ஊழியர்களுக்கு மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால், மருத்துவமனைக்கு அனுப்ப  வேண்டும். மாநிலம் முழுவதும் கிருமி நாசினிகளுக்கு தட்டுபாடு உள்ளது.

 எனவே  வியாபாரிகள் பிளீச்சிங் பவுடர் வாங்கி அதனை கொண்டு கிருமி நாசினி  தயாரித்து பயன்படுத்தலாம். கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்த வரை இந்தியா  இரண்டாம் நிலையில் உள்ளது. கைகளை கழுவுவதன் மூலமாகவும், நாம் இருக்கும்  இடங்களை தூய்மையாக வைத்து கொண்டாலே நோய் பரவாமல் தடுக்க முடியும். சளி,  காய்ச்சல், இருமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற முடிவுக்கு வர  வேண்டாம். மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ்  குறித்து மாவட்ட நிர்வாகம் தரும் தகவல்களை மட்டும் நம்ப வேண்டும்.

வாட்ஸ்  அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரக்கூடிய அனைத்து தகவல்களையும் நம்ப  வேண்டாம். அவற்றின் உண்மை தன்மையை ஆராய்ந்து கொள்ள வேண்டும். பொதுமக்களின்  நலன் கருதி மார்க்கெட்டில் சில நுழைவுவாயில்களை மூட நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும்  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.  இதைத்தொடர்ந்து நகராட்சி  அதிகாரிகள் சோப் மற்றும் சானிடைசர்கள் கொண்டு கைகளை கழுவும் முறை குறித்து  செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக  புளூமவுண்டன், மணிக்கூண்டு உள்ளிட்ட சில நுழைவு வாயில்கள் தவிர பிற நுழைவு  வாயில்கள் மூடப்பட்டு பூட்டப்பட்டன.

Tags : Closure ,public ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...