×

மாமல்லபுரம் பேரூராட்சி மயான பாதையை பொக்லைன் இயந்திரத்தால் தோண்டி சிமென்ட் சாலை நாசம்

மாமல்லபுரம், மார்ச் 19: மாமல்லபுரத்தில் பொக்லைன் இயந்திரத்தால் தோண்டிய சிமென்ட் சாலை நாசமாகிவிட்டது. இதனால், இதனை தார்சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுத்துகின்றனர். மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலை அருகே மயான பாதை உள்ளது. மயானத்துக்கு செல்ல முறையான பாதை இல்லாததால், இங்கு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.அதன்பேரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இங்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால், மாமல்லபுரத்தில் உள்ள மீனவர் பகுதி, திருக்கழுக்குன்றம் சாலை, கங்கைகொண்டான் மண்டபம் தெரு, வேதாசலம் நகர், அண்ணா நகர், திருக்குளத் தெரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும், இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் இந்த சிமென்ட் சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் பொக்லைன் இயந்திரம் மூலம், சாலையை கிளறியது. ஆனால், அந்த பணிகள் தொடங்கிய நிலையிலேயே கிடப்பில் போட்டுவிட்டது. இதனால், தற்போது சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சடலத்தை எடுத்து கொண்டு, இறுதி ஊர்வலம், காரியம் மற்றும் சடங்குகள் நிறைவேற்ற செல்லும்போது மக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும், மீனவ குடியிருப்பு பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சேதமடைந்து படுமோசமாக மாறியுள்ள மயான சாலையை, இந்த கோடை காலத்தில் தார்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாமல்லபுரத்தில் மக்களின் பல  ஆண்டு கால கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் கடந்த 10 ஆண்டுக்கு முன் கோவளம் செல்லும் சாலை அருகே மயானத்துக்கு செல்ல சிமென்ட் சாலை அமைத்து கொடுத்தது. மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த சாலையை பயன்படுத்தினர். ஆனால், இந்த சாலையை முறையாக பராமரிக்காமல் விட்டதால் குண்டும், குழியுமாக காணப்பட்டது.
இதனால், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தானாக முன் வந்து சீரமைப்பதாக கூறி, ஊழியர்கள் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் கிளறினர்.  ஆனால், அந்த பணியை அப்படியே விட்டு சென்றுவிட்டனர். தற்போது இந்த சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மயான சாலையை தார் சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : barracks ,Mamallapuram ,Pokaline ,
× RELATED தொடரும் அகழாய்வு பணி ஆதிச்சநல்லூரில்...