கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்ப்பதற்காக 80 கிராம் அரிசி, 10 கிராம் பருப்பு வீடுகளில் வழங்கிய அங்கன்வாடியினர்

தேனி, மார்ச் 19: கொரோ னா வைரஸ் தாக்குதலை தவிர்ப்பதற்காக விடுமுறை விடப்பட்டுள்ளதையடுத்து, அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களின் வீடுகளில் மாணவ, மாணவியர்களுக்கான அரிசி, பருப்பு வகைகள் நேரடியாக வழங்கப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாமல் அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. அதேசமயம் அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நாள்தோறும் இம்மாணவ, மாணவியர்களுக்கு ஒதுக்கப்படும் சாப்பாட்டினை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் சுமார் 1100 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முன்பருவக்கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்காக விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அங்கன்வாடி பணியாளர்கள் மையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அன்றன்றைக்கு சாப்பாடாக வழங்குவதை தவிர்த்து, அரசு ஒதுக்கியுள்ள அரிசி, பருப்பு, எண்ணை வகைகளை மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களிடம் நேரடியாக தலா ஒரு மாணவருக்கு 80 கிராம் அரிசி, பத்து கிராம் பருப்பு, 10 மிலி எண்ணை என சமையல் பொருள்களை வழங்கி வருகின்றனர். சில அங்கன்வாடி மைய பணியாளர்கள் அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களை மையத்திற்கு அழைத்து 10 நாட்களுக்கான அரிசி, பருப்பு, எண்ணை வகைகளை மொத்தமாக வழங்கி வருகின்றனர்.

Related Stories: