×

கொரோனாவால் வேலை இழந்து தவிக்கும் கூலித்தொழிலாளர்கள் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க சிபிஎம். கலெக்டரிடம் கோரிக்கை

தேனி, மார்ச் 19: கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவிற்கு கூலித்தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கிராமங்களிலும் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என சிபிஎம் கட்சி சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) தேனி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் அகில இந்திய விவசாய சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் தயாளன் ஆகியோர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பல்லவிபல்தேவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

இம்மனுவில், தேனி மாவட்டத்தில் 12 லட்சம் மக்கள் தொகை உள்ளது. கடந்த மக்கள் தொகை கணக்கின்படி, 2 லட்சத்து 75 ஆயிரத்து 585 பேர் விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவிற்கு தினசரி வேலைக்கு சென்று வருபவர்களாக உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்திருப்பதால் கேரளாவிற்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகமும் கேரளாவிற்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

விவசாய கூலித் தொழிலாளர்கள் தொடர்வேலை இழப்புகளால் பாதித்து வறுமை நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தை பொறுத்தமட்டில் விவசாய தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பேரூராட்சிகளாகவும், நகராட்சிகளாகவும் உள்ளன. இத்தகைய நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளவர்களுக்கும், அனைத்து ஊராட்சிகளில் உள்ள கூலித்தொழிலாளர்களை கணக்கெடுத்து 100 நாள் வேலை வழங்க வேண்டும். வேலையிழக்கும் காலத்திற்கு நிவாரணமாக உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : wage laborers ,CPM ,Collector ,
× RELATED குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே...