×

வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை

பெ.நா.பாளையம்,மார்ச்19:  பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், கோடை காலம் துவங்கி இருப்பதாலும் வனப்பகுதியை ஒட்டி உள்ள  புறம்போக்கு நிலங்களில் புற்கள் காய்ந்த நிலையில் உள்ளது. அப்பகுதிகளில் சிலர் மாலை நேரங்களில் மது அருந்திவிட்டு புகை பிடித்து விட்டு அணைக்காத சிகரெட் துண்டுகளை வீசி விடுகின்றனர். இதனால் அப்பகுதிகளில் ஏற்படக்கூடிய தீ அருகில் உள்ள வனப் பகுதிகளில் பரவக்கூடிய அபாயம் உள்ளது. தற்போது கட்டாஞ்சி மலை  ஒட்டியுள்ள சில இடங்களில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டு உடனடியாக வன பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்துள்ளனர்.

வனப்பகுதியில் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களை சுத்தப்படுத்தி தீ வைப்பதன்  காரணமாக வனப்பகுதியில் தீ பரவக்கூடிய அபாயம் உள்ளது.  அப்படி தீ வைப்பதாக இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்து வன  பணியாளர்களை அருகில் வைத்து சுத்தப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. வனப்பகுதியில் அல்லது  வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலத்தில் தீ தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு 0422- 2692685 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படுத்தும்  நபர்கள் மீது வனப் பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : persons ,fire ,forest areas ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா