×

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தொழில்துறை முடக்கம்

கோவை, மார்ச் 19:  கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தொழில்துறை முடங்கியுள்ளது. வங்கிக்கடன் வழங்கவும், வட்டி தள்ளுபடி செய்யவும் அரசு முன்வர வேண்டும் என டேக்ட் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்  முனைவோர் சங்க (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் கொரோனா தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள்  பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் தொழில்கள், வியாபாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில் நகரமான கோவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் 50 ஆயிரத்துக்கும்  மேல் இயங்கி வருகின்றன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடும் நெருக்கடியில் தொழில்கள் உள்ள சூழ்நிலையில் கோவையின் மிக  முக்கிய உற்பத்தியான மோட்டர், பம்பு செட்டுகள், வெட்கிரைண்டர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குகூட பொருட்களை அனுப்ப முடியவில்லை. இதனால், வியாபாரம் முற்றிலும் முடங்கி உள்ளது.
பெரும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து தொழில்களையும்,  தொழிலாளர்களையும் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் முன்வர வேண்டும். குறிப்பாக, தொழில்களின்  உற்பத்தி திறனுக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும். வங்களில் தொழில்முனைவோர் வாங்கியுள்ள  கடன் தொகையை திருப்பிச்செலுத்த ஒரு ஆண்டு கால நீட்டிப்பு செய்து தரவேண்டும். வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்