×

முத்துமாரியம்மன் கோயில் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன்

காரைக்குடி, மார்ச் 19: காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி விழாவை முன்னிட்டு  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். கொரோன அச்சம் நாடு முழுவதும் இருந்தாலும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்த பெற்ற கோயிலாக உள்ளது. இக் கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி பங்குனி விழா 42 நாட்களுக்கு மேல் சிறப்பாக கொண்டாப்படுவது வழக்கம். இங்கு நடைபெறும் பால்குட விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள். பிரசித்திபெற்ற இக்கோயில் மாசி பங்குனி விழா துவக்கமாக  பூச்சொரிதல் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூ தட்டுகளை எடுத்துக் கொண்டு முத்தாலம்மன் கோயிலுக்கு வந்து அங்கிருந்து முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திகடனை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து  10ம் தேதி  கொடியேற்றம், காப்புக் கட்டுதல் துவங்கியது.  ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தத. 17ம் தேதி கரகம், மது, முளைப்பாரியும், நேற்று  காவடி, பூக்குழி, பால்குடம் விழா நடந்தது. இரவு 8.20 மணிக்கு மேல் காப்பு பெருக்குதல் நிகழ்ச்சி நடந்தது.
பால்குட விழாவை முன்னிட்டு சிவகங்கை, மதுரை, திருச்சி, காரைக்குடி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். காப்புக் கட்டிய நாள் முதல் நேற்று வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்திகடன் செலுத்தியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

20 அடிக்கு மேல் வரை பக்தர்கள் வேல் குத்தி தங்களின் நேர்த்திகடனை செலுத்தினர். விழாவை முன்னிட்டு நகர் பகுதி முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் நடந்தது.  இன்று அம்மன் வீதி உலாவும், 20 ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்தியும் பக்தர்கள் அதிக அளவில் கூடி தங்கள் நேர்த்திகடனை செலுத்துவதில் ஆர்வம் காட்டினர்.

Tags : Muthumariamman Temple Festival Thousands ,devotees ,Milky Way ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...