×

யாரும் கலந்து கொள்ளாததால் பஸ் ஸ்டாண்ட் சுங்க ஏலம் 14வது முறையாக ஒத்திவைப்பு

ஈரோடு, மார்ச் 19: ஈரோடு மாநகராட்சியில் 12 இனங்களுக்கான ஏலம் நேற்று நடந்தது. இதில் 3 இனங்களுக்கு மட்டுமே ஏலதாரர்கள் பணம் செலுத்தியிருந்ததால் 3 இனங்களுக்கு ஏலம் விடப்பட்டது. நேற்று கொண்டு வரப்பட்ட ஏலத்தில் பஸ் ஸ்டாண்ட் சுங்க கட்டணம் வசூல் தொடர்பாக யாரும் கலந்து கொள்ளாததால் 14வது முறையாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.n ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பஸ் ஸ்டாண்ட் கடைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் வாகனங்களுக்கான சுங்க கட்டண வசூல், கட்டண கழிப்பறைகள் போன்ற இனங்களுக்கான ஏலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 3 ஆண்டு நிறைவடைந்ததால் 12 இனங்களுக்கான ஏலம் நேற்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆணையாளர் இளங்கோவன் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் (வருவாய்) குமரேசன் தலைமையில் நேற்று ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் பஸ் ஸ்டாண்டில் உள்ள 35 நம்பர் கடை 9 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், ஆர்.கே.வி.ரோடு வணிக வளாகத்தில் உள்ள 19ம் நம்பர் கடை 4 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், மூலப்பட்டறையில் உள்ள கட்டண கழிப்பறை 51 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது. மற்ற இனங்களுக்கு யாரும் பணம் செலுத்தாததால் ஏலம் நடைபெறவில்லை.

குறிப்பாக, ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு வரும் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் வசூல் தொடர்பாக 13 முறை நடத்தப்பட்டு ஏலம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் 14வது முறையாக நேற்று ஏலம் நடந்தது. இதில், கலந்து கொள்ள யாரும் பணம் செலுத்தாததால் ஏலம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.மேலும், 8வது முறையாக பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் மேற்குபுற முதல் தள 8ம் நம்பர் கடை 8வது முறையாக ஏலம் கொண்டு வரப்பட்டும் ஏலம் போகவில்லை. நேற்று ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட 12 இனங்களில் 3 இனங்கள் ஏலம் போன நிலையில் மீதமுள்ள 9 இனங்களின் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,`மாநகராட்சிக்கு வருவாயை அதிகரிக்கும் வகையில் வணிக வளாகங்கள், இருசக்கர வாகனங்கள், கட்டண கழிப்பறைகள் ஏலம் விடப்பட்டு வருகிறது. தற்போது, 12 இனங்களுக்கு ஏலம் கொண்டு வரப்பட்டதில் 3 இனங்களுக்கான ஏலத்தில் மட்டுமே ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். மற்ற இனங்களுக்கான ஏலத்தில் யாரும் கலந்து கொள்ளாததால் மீண்டும் 9 இனங்களுக்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி, ஏலத்தொகைக்கு ஏலம் கேட்டிருந்தால் மட்டுமே ஏலம் விடப்படும். தற்போது ஏலம் எடுத்த இனங்களுக்கு உரிய விதிமுறைகளின்படி அனுமதி அளிக்கப்படும்’ என்றனர்.

Tags : Bus Stand Customs Auction ,
× RELATED பஸ் ஸ்டாண்ட் சுங்க கட்டண ஏலம் 13வது...