×

மார்ச் இறுதிக்குள் மாநகராட்சி பட்ஜெட்

ஈரோடு, மார்ச் 19: ஈரோடு மாநகராட்சியில் பட்ஜெட் மார்ச் இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கேற்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், வருவாய் ஈட்டும் வகையில் குடிநீர் கட்டணம், சொத்துவரி, காலியிட வருவாய் இனங்கள் தொடர்பாகவும் பட்ஜெட்டில்  வெளியிடப்படும். தற்போது, மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு, கனி மார்க்கெட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டத்தின் ஒரு பகுதி என பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பொது நிதியை கொண்டும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சாக்கடை வசதிகள், சாலை வசதிகள் மேம்பாடு, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மாநகராட்சி பகுதிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும், இதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, கவுன்சில் இருக்கும்போது மேயர் தலைமையில் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம்  சார்பில் மார்ச் இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு