×

காலை முதல் மது விற்பனை அமோகம்

காரைக்குடி, மார்ச் 19: காரைக்குடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் சரக்கு விற்பனை அமோகமாக நடந்து வரும் நிலையில் மதுவிலக்கு காவல்துறை கண்டுகொள்வது இல்லை என புகார் எழுந்துள்ளது. காரைக்குடி தாலுகா பகுதியில் 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. நகர் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை பகல் 12 மணிக்கு திறந்து 10 மணி வரை செயல்படுகிறது. பல கடைகளில் பார் இல்லாத நிலையே தொடர்கிறது.

பார் உள்ள கடைகளில் இரவு நேரங்களில் சரக்கை வாங்கி கையிருப்பில் வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளாது. இவர்கள் சாதாரணமாக விற்பனை செய்யப்படும் விலையை விட ரூ. 50 வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்கின்றனர். சில பார்களில் தகர சீட்களில் ஓட்டை போட்டு அதில் விற்பனை செய்யப்படுகிறது. தவிர சாக்குபையில் வைத்துக் கொண்டு கண்மாய்கரை, கடைகளில் வெளியே குடிமகன்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதனை கண்காணிக்க வேண்டிய மதுவிலக்கு காவல்துறைக்கு சம்மந்தப்பட்ட பார் உரிமையாளர்களிடம் இருந்து உரிய கவனிப்பு செல்வதால் கண்டுகொள்வது இல்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து செஞ்சை ரவி கூறுகையில், செஞ்சை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் வெளியே சரக்கு விற்பனை அமோகமாக நடக்கிறது.

காலை முதல் விற்பனை செய்யப்படுகிறது. சரக்கு மிகுதியில் குடிமகன்கள் பாட்டில்களை சாலையிலேயே உடைத்து விட்டு செல்கிறனர். இதனால் காலை நேரத்தில் வாக்கிங் செல்ல முடியாத நிலை உள்ளது. தவிர கடைவாசலில் அமர்ந்து கொண்டு குடிபோதையில் நடந்து செல்வோரை வம்புக்கு இழுக்கின்றனர். இங்குள்ள கண்மாயில் சரக்கு விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களுக்கு உரிய கவனிப்பு செல்வதால் யாரிடம் வேண்டும் என்றாலும் புகார் கூறுங்கள் என கூறுகின்றனர். மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு