×

வீரகனூர் பேரூராட்சியில் சந்தை மேம்படுத்தும் பணி விவசாயிகள் எதிர்ப்பால் நிறுத்தம்

கெங்கவல்லி, மார்ச் 19: வீரகனூர் பேரூராட்சி பகுதியில் சந்தை மேம்படுத்தும் பணி விவசாயிகள் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது. கெங்கவல்லி தாலுகா வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை மேம்படுத்துவதற்காக ₹1.50 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த வாரம் பூமி பூஜை போடப்பட்டது. நேற்று காலை, சந்தைப்பேட்டை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் சந்தையைொட்டி கட்டுக்கரை என்கிற பகுதியை பல நூறு ஆண்டுகளாக ஏரி பாசன விவசாயிகள் பாதையாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. அதனால், தங்களுக்கான பாதையை ஒதுக்கிவிட்டு சந்தை மேம்பாட்டு பணிகளை துவங்குமாறு கடந்த 2 நாட்களுக்கு முன்பே விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்காமல் நேற்று சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பணியை மேற்கொண்டார்.

இதை அறிந்த விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தினர். ஏரிப் பாசன விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகளிடம் பேசி, பாதையை ஒதுக்கீடு செய்துவிட்டு பணிகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை ஏற்று சர்ச்சைக்குரிய பகுதியில் தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகளிடமும் பாதையின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி  கூட்டம் நடைபெற பிறகு, சந்தைப்பேட்டை மேம்படுத்தும் பணிகளை செய்திட வேண்டும் என ஒருமனதாக அனைவரும் முடிவு செய்தனர். இதனால், சந்தைப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Veeraganur ,
× RELATED வீரகனூரில் 23 ஆண்டுகளுக்கு பின் திருத்தேர் வெள்ளோட்டம்