×

எஸ்எஸ்எல்சி தேர்வு வரும் 27ம் தேதி தொடக்கம் மாவட்டத்தில் 14 மையத்தில் 10ம் வகுப்பு வினாத்தாள்

சேலம், மார்ச் 19: சேலம் மாவட்டத்தில் வரும் 27ம் தேதி தொடங்கும் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான வினாத்தாள் 14 கட்டுக்காப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கி, கடந்த 2 வாரங்களாக நடந்து வருகிறது. தொடர்ந்து, வரும் 27ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்குகிறது. தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் தேர்வுகள் இயக்ககமும், பள்ளிக்கல்வித்துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 266 மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் உள்பட 45, 063 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதுகின்றனர். இவர்களுக்கென மாவட்டம் முழுவதும் 164 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுப்பணியில் ஈடுபட 170 முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும்படையினர், அறை கண்காணிப்பாளர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தேர்வுக்கான வினாத்தாள் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இவை அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, சேலம், ஓமலூர், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், ஏற்காடு என மொத்தம் 14 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து வரப்பெற்ற வினாத்தாள் கட்டுகள், அங்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மையங்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags : SSLC Examination ,centers ,district ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!