×

சேலம் ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் உள்பட 700 பேருக்கு முக கவசம்

சேலம், மார்ச் 19: சேலம் ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் உள்பட 700 பேருக்கு முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், ரயில்வே துறையும் பயணிகள் வந்து செல்லும் ரயில்வே ஸ்டேஷன்களில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், ஊட்டி, ஆத்தூர், மேட்டூர் என அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பயணிகளிடம் கொரோனா விழிப்புணர்வு பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த ரயில்வே ஸ்டேஷன்களில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை நோட்டீசாக அச்சிட்டு ஒட்டியுள்ளனர். மேலும், துண்டு பிரசுரங்களை பயணிகளிடம் கொடுத்து வருகின்றனர்.

 ரயில்வே ஸ்டேஷன்களில் 24 மணி நேரமும் தூய்மை பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  குடிநீர் குழாய்கள் இருக்கும் இடத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுகிறது. பயணிகள் அடிக்கடி தொடும் இடங்களான கைப்பிடிகள், கதவுகள், படிக்கட்டு கம்பிகள், எஸ்கலேட்டர்கள், லிப்ட்கள், டிக்கெட் கவுன்டர் பகுதிகள், நாற்காலிகள், தூண்கள் போன்ற இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், பயணிகளின் ஓய்வறைகள் மற்றும் இவ்வழியே இயங்கும் ரயில்களில் கதவுகள், சீட்கள், கைப்பிடி கம்பிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நோயாளிகளை தீவிரமாக பரிசோதித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இதனிடையே, சேலம் ரயில்வே கோட்டத்தில் வணிக பிரிவில் பணிபுரியும் டிக்கெட் பரிசோதகர்கள், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் பணியாளர்கள்,  பார்சல் பிரிவில் பணியாற்றும் பணியாளர்கள் என மொத்தம் 700 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பணியாற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து   முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் நேற்று வணிக பிரிவு பணியாளர்களுக்கு முக கவசத்தை வழங்கினார்.     இதுபற்றி  அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் வணிக பிரிவு பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் முக கவசத்தை அணிந்து பணியாற்றுவார்கள். ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

Tags : ticket inspectors ,Salem Railway Line ,
× RELATED சேலம் ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பு வார விழா