×

கிருஷ்ணகிரி அணை மதகுகளுக்கு வெல்டிங் வைக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி, மார்ச் 19:கிருஷ்ணகிரி அணையில் பொருத்தப்பட்ட 7 மதகுகளுக்கு வெல்டிங் வைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் பழுதான 7 மதகுகள் 19 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்படுகிறது. இதற்காக 7 மதகுகள் அகற்றும் பணிகள் முடிந்து, கடந்த ஜனவரி 18ம் தேதி புதிய மதகுகள் பொருத்தும் பணிகள் தொடங்கியது. ஒவ்வொரு மதகின் 2 பக்கத்திலும் 8 ரோலர்கள் பொருத்தப்பட்டு, மதகின் 3 கீழ் பாகங்களையும், 4 மேல் பாகங்களையும் வைத்து, அவற்றின் குறுக்கில் 5 கேடர்களை வைத்து இணைக்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், இணைப்பு பாகம் முழுவதும் வெல்டிங் வைக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வரை 5 மதகுகள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்தன.

மார்ச் 2ம் தேதி மேலும், 2 மதகுகள் பொருத்தும் பணிகள் தொடங்கி, நேற்று முன்தினம் 7 மதகுகள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்தது. தற்போது வெல்டிங் வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் குறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி அணையின் 2வது, 3வது மற்றும் 8வது மதகுகளுக்கு முழுமையாக வெல்டிங் வைக்கும் பணிகள் முடிந்தது. தற்போது 4வது, 7வது, 6வது ஆகிய 3 மதகுகளுக்கு வெல்டிங் வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து 5வது மதகிற்கு வெல்டிங் வைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. 4 மதகுகளுக்கு வெல்டிங் வைத்து முடிப்பதற்குள் மற்ற 3 மதகுகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் முடியும்,’ என்றனர். கிருஷ்ணகிரி அணையின் தற்போதைய நீர்மட்டம், மொத்த உயரமான 52 அடியில் நேற்று 26 அடியாக இருந்தது. நீர்வரத்து விநாடிக்கு 8 கன அடியாகவும், அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வெல்டிங் மற்றும் பெயிண்டிங் பணிகள் நிறைவடைந்த பின், அணையில் தண்ணீரை சேமிக்க பொதுப்பணி துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Tags : Krishnagiri Dam ,
× RELATED சாத்தனூர் அணை நீர்மட்டம் 117.85 அடியாக...