×

அரூரில் மானிய தொகைக்கான காசோலை வழங்க விவசாயியிடம் 2500 லஞ்சம் அதிகாரிக்கு ஓராண்டு சிறை

தர்மபுரி, மார்ச் 19: தர்மபுரி மாவட்டம் அரூர் விவசாயிக்கு மானிய தொகைக்கான காசோலை வழங்க, 2500 லஞ்சம் வாங்கிய, பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், ₹3ஆயிரம் அபராதமும் விதித்து தர்மபுரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தர்மபுரி மாவட்டம் அரூர் கொரங்கேரி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). இவர் பட்டுக்கூடு வளர்ப்பு விவசாயி. கடந்த 2009ம் ஆண்டு பட்டுக்கூடு வளர்ப்புக்கான மானியத்தொகை ₹27 ஆயிரம் அரசிடம் இருந்து வந்தது. அந்தக்தொகைக்கான செக் வாங்குவதற்கு, அரூர் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பட்டுக்கூடு தொழிற்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் கிருஷ்ணனை சந்தித்து மானியத்தொகை கேட்டார். அவர், மானியத்தொகை வழங்க வேண்டும் என்றால், 2500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ரவி, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.  

அந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் பணம் 2500 கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட பட்டுவளர்ச்சிதுறை அதிகாரி கிருஷ்ணனை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ராஜ்குமார், பட்டுக்கூடு வளர்ச்சித்துறை தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் கிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags : bribe officer ,jail ,
× RELATED புழல் சிறையில் பிஸ்கட் பாக்கெட்டில்...