×

தாவரவியல் மாணவர்கள் நூதன முயற்சி கொரோனா கைகள் மூலம் 80 சதவீதம் பரவுகிறது பொது இடங்களில் மக்கள் கூடுவதை 14 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்

திருச்சி, மார்ச் 18: கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை 14 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு, விழிப்புணர்வு குறித்து செயல்விளக்க கூட்டம் நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். இதில் கலெக்டர் சிவராசு தெரிவித்தாவது: கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள் வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றை தூய்மை படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 14 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்பட்டவர்கள், குழந்தைகள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பயணம் செய்வதை தவிர்;க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தனி நபர் சுகாதாரத்தினை பேண வேண்டும். குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய் 80 சதவீதம் கைகள் மூலமாகவே பரவுகிறது.

கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம். இருமும் போதும், தும்மும் போதும், கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாகத சேர்ந்து விளையாடாதவாறு கண்காணிக்க வேண்டும். விளையாடிய பின் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவ்வப்போதும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். பொது இடங்கள் மற்றும் வாகனங்களை தூய்மைபடுத்தும் பணி மேற்கொள்ளும்போது மருத்துவத்துறையினர் லைசால் பயன்படுத்த வேண்டும்.

ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் கைகழுவும் பழக்கம் 20 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருவதால் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தால் இந்த நாடுகளில் பாதிப்பு இல்லை. எனவே நாமும் சோப்பு போட்டு கைகழுவும் பழக்கத்தை கடைபிடித்தால் இந்நோயிலிருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள முடியும். அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் இதர துறையினர்களுக்கும் கிருமி நாசினி கைகழுவும் திரவம் தயாரிப்பது தொடர்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கூட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : places ,gathering ,
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!