×

முசிறி அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் பாட்டில் கட்டி மரங்களுக்கு உயிர் நீர்

முசிறி, மார்ச் 18: முசிறி அண்ணா அரசு கல்லூரியின் தாவரவியல் துறை மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் வளர்ந்துள்ள மரங்கள் கோடை வெயிலில் பட்டுப்போகமால் இருக்க நூதன முறையில் உயிர்நீர் கொடுத்து பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்கு இயற்கை ஆர்வலர்கள மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. முசிறி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் துறை உள்ளது. இத்துறையில் பயிலும் மாணவ, மாணவிகள் இயல்பாகவே தாவரங்கள் மீது ஆர்வமும், அதன் வளர்ச்சி முறை குறித்தும், சிந்தனை இருக்கும். இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் வேம்பு, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது கடும் கோடை வெயில் இருப்பதால் வனப்பகுதியில் உள்ள மரங்கள் கூட இலைகளை உதிர்த்து மொட்டை மரமாக உள்ளது.

இந்த வெயிலில் இருந்து கல்லூரி வளாகத்தில் உள்ள சுமார் 400 மரங்களை காத்திடும் முயற்சியாக தாவரவியல் துறை பேராசிரியர் சரவணமூர்த்தி. மாணவர்கள் துணையுடன் நூதன யுக்தியை பயன்படுத்தி மரங்களுக்கு உயிர்நீர் அளித்து வருகிறார். தண்ணீர் குடித்துவிட்டு வீசி எரியும் காலிபிளாஸ்டிக் பாட்டில்களின் அடிப்பாகத்தை முக்கால் பாகம் அறுத்துவிட்டு பாட்டில் மூடியில் துளையிட்டு அதில் நூல் ஒன்றை தொங்குமாறு செய்து பாட்டிலை தலைகீழாக கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களில் கட்டுகின்றனர். தலைகீழாக தரையிலிருந்து மரத்தில் சுமார் அரை உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாட்டிலில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. இவ்வாறு ஊற்றப்படும் தண்ணீர் சொட்டுநீர் பாசன முறையில் தொங்கும் நூல் வழியாக சொட்டு, சொட்டாக வேர் பகுதியில் உள்ள தரையை நனைத்து ஈரப்படுத்துகிறது. இதனால் மரத்திற்கு கோடை வெயிலை சமாளிக்கும் அளவிற்கு ஈரப்பதம் கிடைக்கிறது.

இது குறித்து பேராசிரியர் சரவணமூர்த்தி கூறுகையில், கோடை வெயிலில் மரங்கள் பட்டு போகாமல் இருக்க தேவையற்ற தூக்கி எறியப்படும் காலி குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் மரங்களுக்கு தண்ணீர் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு கொடுக்கப்படும் உயிர்நீர் மூலம் மரத்தின் வேர்ப்பகுதியில் உள்ள மண்ணிற்கு நெகிழ்வு கிடைக்கும். இதன்மூலம் ஏற்படும் நுண்துளைகளால் வேருக்கு காற்றோற்றட்டமும், தண்ணீர் இருக்கும் பகுதியை நோக்கி வேர் செல்வதற்கு வாய்ப்பும் ஏற்படும். கோடை வெய்யிலின் தாக்கத்தால் மண்தரை சூடாகி அந்த வெப்பத்தினால் வேர் பட்டுப்போகாமல் இருக்க உதவும். கல்லூரி வளாகத்தில் உள்ள 350 மரங்களுக்கு இதுபோன்ற பாட்டில்கள் கட்டி தண்ணீர் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 164 மரங்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த பாட்டில்களுக்கு தண்ணீர் ஊற்றி மரங்களுக்கு உயிர்நீர் கொடுக்கும் பணியினை தாவரவியல் மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் செய்து வருகின்றனர் என்றார்.

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் வளர்ந்த மரங்களை பட்டுப் போகாமல் காத்திடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முசிறி அரசு கல்லூரி மாணவர்களை இயற்கை ஆர்வலர்கள் பாராட்டி செல்கின்றனர். மரங்களுக்கு உயிர்நீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு வரும் தாவரவியல் துறை மாணவ, மாணவிகள், பேராசிரியர்களை கல்லூரி முதல்வர் ராஜ்குமார் பாராட்டி வாழ்த்தினார்.

Tags : Government College Campus ,Musiri Anna ,
× RELATED முசிறி அண்ணா அரசு கல்லூரியில்...