×

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரயில், விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை டாஸ்மாக் பார், பூங்காக்கள் பள்ளி, கல்லூரிகள் மூடல்

திருச்சி, மார்ச் 18: கொரோனா வைரஸ் பரவுவதன் எதிரொலியாக திருச்சி விமான நிலையம், ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டாஸ்மாக் பார், பூங்காக்கள் மூடப்பட்டன. கோயில்கள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 6,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரசுக்கு 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உடற் பயிற்சி மைதானம், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களும் மூடப்பட்டுவிட்டது. திருச்சி விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்குள் பயணிகளை பரிசோதனை செய்ய 3 மருத்துவக்குழுவினர் உள்ளனர். அதுபோல் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்கள், வந்து செல்லும் ரயில்களில் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும் ரயில் பயணிகள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டனர். வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, ரங்கம் ரங்கநாதர் கோயில், தஞ்சை பெரிய கோயில் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. குறைந்த அளவில் வரும் பக்தர்களும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அரசு உத்தரவுக்கு மாறாக திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் 2 தனியார் பள்ளி, ஒரு தனியார் மகளிர் கல்லூரிகள் நேற்று வழக்கம் போல் இயங்கின. மாவட்டத்தில் 72 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் ஓட்டலில் உள்ள 30 ஏசி பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயில் வளாகங்களில் அடிக்கடி கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கோயில் அலுவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயிலின் உட்புற வளாகம் மட்டுமின்றி வெளிப்புறங்களிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கொரோனா வைரஸ் தகவல் மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அலுவலர் காய்ச்சல் சளி இருமல் உள்ளிட்ட அறிகுறியுடன் பக்தர்கள் உள்ளே வரும்போது அவர்களை அழைத்து ஆரம்ப சுகாதார மையம் அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொள்வார். மேலும் அங்கு கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் அடங்கிய அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் பீதியால் வழக்கமாக வரும் பக்தர்கள் கூட்டத்தை விட மிக குறைவான பக்தர்களே தற்சமயம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

'கைதிகளை சந்திக்க தடை'
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1,508 பேரை அவர்களது உறவினர்கள், வக்கீல்கள் சந்திக்கவும் வரும் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : airports ,
× RELATED போகி பண்டிகையின் போது விமான நிலைய...