×

ஹெட்போனால் காது கேட்கும் திறன் பாதிப்பு

திருவாரூர், மார்ச் 18: அதிக சத்தம் உள்ள இடங்கள் மற்றும் ஒலிபெருக்கி மற்றும் ஹெட்போன் காரணமாக காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவதாக டீன் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். உலக செவித்திறன் விழிப்புணர்வு வார விழாவினையொட்டி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவி திறன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் டீன் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவ கல்லூரி குழந்தைகள் நல பிரிவு பேராசிரியர் டாக்டர் கண்ணன், கண்காணிப்பாளர் ராஜா, காது-மூக்கு-தொண்டை இணை பேராசிரியர் ரமேஷ் பாபு மற்றும் மருத்துவர்கள் செந்தில்குமார், தர்மராஜா, மோகன்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கருத்தரங்கத்தை துவங்கி வைத்து டீன் முத்துக்குமரன் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு சார்பில் இந்த செவித்திறன் விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறவி செவித்திறன் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு சரியான வயதில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அவர்களால் பேச இயலாது.

மேலும் காது கேட்கும் திறனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நவீன கருவிகள் அறுவை சிகிச்சை செய்து இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்யலாம். இதற்கான வசதி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து வருவதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அதிக சத்தம் உள்ள இடங்களில் வேலை செய்வது மற்றும் ஒலிபெருக்கி மற்றும் ஹெட்போன் போன்ற பல்வேறு காரணங்களினால் காது கேட்கும் திறன் அதிகமாக பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற சூழ்நிலைகளை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதுமட்டுமன்றி காதுகேளாமை குறைவாக உள்ள முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு அரசு மூலம் கட்டணமில்லா காது கேட்கும் கருவியும் வழங்கப்பட்டு வருவதால் இதனையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு டீன் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்