×

திருவாரூர் அருகே கேக்கரையில் குட்டைபோல் தேங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்

திருவாரூர், மார்ச் 18: திருவாரூர் அருகே கேக்கரையில் குட்டைபோல் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகரில் பாதாள சாக்கடை திட்டமானது ரூ.50 கோடி மதிப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு தற்போது வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திட்டமானது உரிய தரத்துடன் மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் தொட்டிகளில் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்படுவதும் அதனை நகராட்சி ஊழியர்கள் சரிசெய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் உரிய தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த பணியினை தற்போது பராமரிப்பதற்கு நகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பராமரிப்பு செலவிற்காக நகராட்சி மூலம் வழங்கப்படும் நிலையில், இதில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையினை கூட செலவு செய்யாமல் அந்த நிறுவனத்தினர் பெருமளவு தொகையினை சுருட்டும் நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த பாதாள சாக்கடை திட்டத்திற்கென நகரின் பல்வேறு இடங்களில் கழிவுநீரேற்றும் நிலையங்கள் கட்டப்பட்டு அதில் நகராட்சி சார்பில் மின்மோட்டார்கள் அமைத்து கொடுக்கப்பட்ட போதிலும், இந்த தனியார் நிறுவனமானது அதனை கூட சரிவர பராமரிக்காமல் பல்வேறு இடங்களில் பழுது ஏற்ப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு நேரங்களில் பல நாட்கள் வரையில் கழிவுநீரானது சாலையில் வழிந்தோடும் நிலையே இருந்து வருகிறது. அதன்படி திருவாரூர் அருகே கேக்கரை பகுதியில் இந்த பாதாள சாக்கடை மேனுவல் தொட்டயிலிருந்து கழிவுநீரானது மாத கணக்கில் வழிந்தோடுவதால் அப்பகுதியில் உள்ள தரிசு வயல் ஒன்றில் இந்த கழிவுநீரானது குட்டைபோல் தேங்கியுள்ளது. மேலும் இந்த தரிசு வயலில் கடந்த ஓராண்டுக்கு முன் வரையில் அதன் உரிமையாளர் மூலம் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு போர்வெல் மூலம் நீர்பாய்ச்சி பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பாதாள சாக்கடை கழிவுநீர் மூலம் தரிசு வயலானது சென்னை கூவம் நதியை போன்று மாறியதால் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் இந்த கழிவுநீர் தேங்கியுள்ளதன் காரணமாக அருகில் வீடுகளில் இருந்து வரும் போர்வெல்கள் நீர்மட்டம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி அதிகளவில் துர்நாற்றமும் வீசி தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பீதியில் மக்கள் இருந்து வரும் நிலையில், ஏதேனும் தொற்று நோய் அல்லது காய்ச்சல் மற்றும் வாந்தி, வயிற்று போக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் நகராட்சி பகுதியில் இந்த பாதாள சாக்கடை திட்டம் என்பது உரிய தரத்துடன் மேற்கொள்ளப்படாததன் காரணமாக மழை காலங்களில் இதன் கழிவு நீர் என்பது கழிவறையின் பேசின் வழியாக வீடுகளுக்குள் புகும் நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இந்த பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு தயங்கி வருகிம் நிலையில் தங்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்கோ அல்லது கட்டட அனுமதி பெறுவதற்கோ அல்லது ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு புதிய வரி விதிப்பதற்கோ பொதுமக்கள் நகராட்சியை அனுகும்போது பாதாள சாக்கடை இணைப்பு பெற்றால் மட்டுமே குடிநீர் இணைப்போ , புதிய வரியோ அல்லது கட்டட அனுமதியோ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக இந்த பாதாள சாக்கடை இணைப்பானது வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் சார்பில் இது ஒருபுறமிருக்க, இணைப்பிற்கு டெபாசிட் தொகை கட்டிய பின்னர் இணைப்பு கொடுக்க வேண்டுமென்றால் இதற்காக டெண்டர் எடுத்தவர்களுக்கு கட்டணமாக குறைந்தபட்சம் ரூ25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் தொகை செலுத்த வேண்டிய நிலை இருந்து வருவதால் இதன் காரணமாகவும் பொதுமக்கள் இணைப்பு பெறுவதற்கு பொது மக்கள் தயங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாயை ஒட்டியவாறு இந்த பாதாள சாக்கடை இணைப்பு குழாயும் செல்வதால் கனரக வாகனம் செல்வது போன்ற பல்வேறு காரணங்களால் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் உடையும்போது குடிநீரும், கழிவு நீரும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் நிலை இருந்து வருகிறது. இதே போன்று நடந்த சம்பவத்தினால் கடந்த 9 ந் தேதி நகரில் துர்க்காலயா ரோடு ,காமாட்சி அம்மன் கோவில் தெரு ,மடப்புரம் உட்பட பல்வேறு தெருக்களில் திடீரென ஏற்பட்ட வயிற்றுப்போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வயிற்றுப்போக்கு நோய்க்கு காரணம் முழுக்க முழுக்க நகராட்சியின் குடிநீரில் கழிவுநீர் கலந்து தான் காரணம் என்று பொதுமக்கள் சார்பில் பெரும் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

'சட்டமன்றத்தில் எதிரொலி'
இந்நிலையில் திருவாரூர் நகரின் இந்த நிலை குறித்து, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் சட்டமன்றத்தில் குரல் எழுப்புவார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இதுகுறித்து சட்டமன்றத்தில் பூண்டி கலைவாணன் பேசியபோது, குடிநீரில் கழிவுநீர் கலந்தது உண்மைதான் என்றும், தற்போது இந்த வயிற்றுப்போக்கு தாக்கம் குறைந்துள்ளதாகவும் இதுகுறித்து சுகாதார துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகும் நிலையில் இது வரையில் இந்த நோயின் தாக்கம் குறையாமல் ஒருசிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீரானது நகரில் பல்வேறு இடங்களில் தினந்தோறும் வழிந்து வருவது மட்டுமின்றி கேக்கரை போன்ற பகுதிகளில் குட்டை போன்று தேங்கி நிற்பதால் போர்வெல்கள் நீர்மட்டம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே இதுகுறித்து சுகாதார துறையும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kekkara ,Thiruvarur ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...