×

குடந்தை தொழிலதிபர் கொலையில் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

கும்பகோணம், மார்ச் 18: கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்தவர் ராமநாதன் (65). தொழிலதிபரான இவருக்கு அந்த பகுதியில் ஏராளமான எண்ணெய் கடைகள் உள்ளது. இவரது மனைவி விஜயா. இவர்களது மகள் சரண்யா. மருமகன் கோவிந்தராஜ். அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு கணவருடன் சரண்யா சென்று விட்டார். கடந்த 15ம் தேதி இரவு 5 பேர் திருமண பத்திரிகை வைக்க வேண்டுமென ராமநாதன் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் விஜயாவை ஒரு அறைக்குள் தள்ளி கதவை சாத்தி விட்டு, ராமநாதனை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் பீரோவில் இருந்த 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராமநாதனின் மருமகன் கோவிந்தராஜ் மற்றும் உறவினர்கள், அந்த பகுதியில் உள்ள லோடுமேன்களிடம் விசாரித்து வருகின்றனர். ராமநாதன் வீட்டுக்கு வந்தவர்கள் தெரிந்தவர்களாகவே இருக்க வேண்டும். அதனால் தான் அவர் வரவேற்று ஹாலில் அமர வைத்துள்ளார். அந்த கும்பலில் அனைவரும் 20 முதல் 25 வயதுடையவர்கள். பீரோவில் 100 பவுன் நகைகள், பணக்கட்டுகள் இருந்தும் 60 பவுன் மட்டுமே எடுத்து சென்றுள்ளனர். பண கட்டுகளை கூட அவர்கள் எடுக்காமல் அறையில் சிதற விட்டு சென்றுள்ளனர்.

வேறு பிரச்னைக்காக கொலை செய்து விட்டு கொள்ளையடித்ததுபோல் அந்த கும்பல் நாடகமாடியதா, வேலைபார்த்த ஊழியர்களிடம் எதுவும் பிரச்னை உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனாலும் இந்த விவகாரத்தில் இதுவரை போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த பகுதியில் நடந்த செல்போன் உரையாடலை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

'டாக்டர்களுக்கு பிரத்யேக உடை'
கும்பகோணத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வார்டுகள், மருந்து அறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தொடர்ச்சியாக கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிகள் உபயோகப்படுத்தும் கட்டில், தலையணை, ஜன்னல் கம்பி, படிக்கட்டு, நாற்காலி, மேஜை, கதவுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பிரித்யேக உடை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வார்டுகளில் சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த உடையை அணிந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : businessman ,murder ,Kundana ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்