×

வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் மறியலால் நூலகர் அதிரடி சஸ்பெண்ட்

வேலூர், மார்ச் 18: வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நூலகரை போலீசார் கைது செய்தனர். வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் வெளிமாவட்ட மாணவர்களின் வசதிக்காக விடுதி வசதியும் உள்ளது. இக்கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து வருபவர் தாமோதரன்(55). இவர் கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். கடந்த 13ம் தேதி கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை தேடிச்சென்ற தாமோதரன், நூலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைக்க உதவிக்கு வரும்படி அழைத்தாராம். இதை நம்பி அவருடன் அந்த மாணவியும் சென்றுள்ளார். அப்போது நூலகத்திற்குள் சென்றவுடன் சிறிதுநேரத்தில் தாமோதரன் கதவை உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அலறினார். உடனடியாக கதவை திறந்துவிடும்படி கூச்சலிட்டாராம். இதனால் தாமோதரன், ‘இங்கு நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உனது செய்முறை தேர்வு மதிப்பெண்ணை குறைக்க செய்வேன்’ என மிரட்டிவிட்டு கதவை திறந்துவிட்டாராம்.

இருப்பினும் கதறி அழுதபடி வகுப்பறைக்கு ஓடி வந்த அந்த மாணவி, நடந்த சம்பவத்தை சக மாணவ, மாணவிகளிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.  எனவே இச்சம்பவம் குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசிலும் புகார் தெரிவித்தனர். இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 31ம் தேதி தொடர் விடுமுறை அளித்து உத்தரவிட்டது.

இருப்பினும் மாணவியிடம் நடந்த பாலியல் சீண்டல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று காலை 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி முன் திரண்டனர். அவர்கள் திடீரென தொரப்பாடி- பாகாயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்குள் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நூலகர் தாமோதரனை சஸ்பெண்ட் செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் பேசினர். அடுத்த சில நிமிடங்களில் நூலகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பை அங்குள்ள தகவல் பலகையில் ஒட்டினர்.

இருப்பினும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், ‘இன்று (நேற்று) மாலை 4 மணிக்குள் தாமோதரனை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மறியலில் ஈடுபடுவோம்’ என தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரி வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூலகர் தாமோதரனை கைது செய்தனர். வேலூரில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நூலகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகார் கொடுத்த மாணவிக்கு போலீசார் மிரட்டல்
உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் கூறுகையில், ‘அந்த மாணவிக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் நூலகர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அனைத்து மகளிர் போலீசில் புகார் கூறினோம். அதன்பேரில் நேற்று (நேற்று முன்தினம்) கல்லூரிக்கு வந்த போலீசார், துறைத்தலைவர்கள் முன்னிலையில் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது கல்லூரி துறைத்தலைவர்கள் மாணவிக்கு எதிராக பேசினர்.

அதேபோல் போலீசாரும் கல்லூரி நிர்வாகத்தினருடன் சேர்ந்துகொண்டு, புகார் கொடுத்த மாணவியிடம் எதிர்காலத்தில் இப்பிரச்னை தொடர்பாக அடிக்கடி கோர்ட்டுக்கு வரவேண்டியிருக்கும், போலீசாரும் அவ்வப்போது உங்கள் வீட்டிற்கு வந்து விசாரிக்க வேண்டியிருக்கும் என மிரட்டினர். மேலும் புகார் கொடுத்த அந்த மாணவியிடம், மாணவர்களின் தூண்டுதலால்தான் நூலகர் குறித்து அவதூறு புகார் கொடுத்தேன் என எழுதி தரும்படி நிர்பந்தித்து வருகின்றனர்’ இவ்வாறு தெரிவித்தனர்.

நூலகரின் மனைவி ஆர்டிஓ
ஏற்கனவே பல மாணவிகளிடம் பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் தாமோதரன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளாராம். சமீபத்தில் வெளிமாநில மாணவியிடமும் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். அந்த மாணவிக்கு தமிழ் சரியாக வராததால் அவரது புகார் கண்டுகொள்ளப்படவில்லையாம். அதோடு சில்மிஷத்தில் ஈடுபட்ட நூலகரின் மனைவி ஆர்டிஓவாக இருப்பதால், அவரது கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் நூலகரின் செயலை கண்டும் காணாமலும் விட்டுள்ளனர். இதுவே நூலகர் தாமோதரன் அடுத்தடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.


Tags : Vellore Government Polytechnic College ,
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்