×

கொரோனா வைரஸ் எதிரொலி சிறைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை சிறைத்துறை அதிரடி உத்தரவு

வேலூர், மார்ச்.18: கொரோனா வைரஸ் எதிரெலியால் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவரது உறவினர்கள் சந்திக்க 2 வாரம் தடைவிதித்து சிறைத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பரவி உள்ளது. இதனால் அந்தந்த மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான 5 தனிச்சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 88 ஆண்களுக்கான கிளைச் சிறைகள், 8 பெண்கள் கிளைச் சிறைகள், ஆண்களுக்கான 2 தனி கிளைச் சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளி, 3 திறந்தவெளிச் சிறை என மொத்தம் 138 சிறைகள் உள்ளது.

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவரது உறவினர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சந்திக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முக்கிய குற்றவாளிகளுக்கு வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே சந்திக்க அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் எதிரொலியால் நேற்று முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை 2 வாரங்களுக்கு அவர்களின் உறவினர்கள் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் சந்தித்து பேச தடை விதித்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் சந்தித்து பேச தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் 2 வாரங்களுக்கு இந்த தடை இருக்கும். எனவே உறவினர்கள் யாரும் கைதிகளை பார்க்க வர வேண்டாம். கொரோனா வைரஸ் தடுக்க முன்னெச்சரிக்ைக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு கைகளை கழுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Coroner ,Relatives ,Prisons ,Prisoners ,
× RELATED சிறைவாசிகளின் நலனுக்காக பார்வையாளர்கள் நியமனம்