×

ஆரணி தொகுதியில் அனைத்து ஊராட்சிகளுக்கும் அடிப்படை வசதி செய்துதரப்பட்டுள்ளது அமைச்சர் பேச்சு

ஆரணி, மார்ச் 18: ஆரணி தொகுதியில் அனைத்து ஊராட்சிகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கம்பாடி ஊராட்சியில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைப்பெற்றது. எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் புங்கம்பாடி சுரேஷ் தலைமை தாங்கினர். ஆவின் துணைத் தலைவர் பாரிபாபு, மாவட்ட பாசறை செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவசான், ஒன்றிய செயலாளர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால் வரவேற்றார்.

இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:
தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில், 30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை 3 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது. மேலும், ஆரணி தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள், ஆற்றுக் கால்வாய் ஆகியவை குடிமராமத்து திட்டத்தில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், விவசாயத்திற்காக கண்ணமங்கலம், மேல்நகர், குண்ணத்தூர், விண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆரணி அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவ கட்டிடம் கட்ட ₹3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஆரணி தொகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆரணி கையிலாசநாதர், எஸ்வி நகரம் மாரியம்மன் கோயில், தேவிகாபுரம் கனகிரீஸ்வரர் பெரியநாயகி, கொளத்தூர் சிவன் கோயில், காமக்கூர் சந்திசேகரசாமி ஆகிய கோயில்களுக்கு புதிய தேர் அமைக்க ₹1.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

மேலும், ஆரணி பெரிய கடை வீதி, வடக்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் தேர் செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய், சாலை அமைக்கும் பணிகள் முடிந்தவுடன் தேர் வெள்ளோட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜோதிலிங்கம், முன்னால் ஒன்றிய குழு உறுப்பினர் எழிலரசி ராஜாராம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சாண்டி, ஊராட்சி செயலாளர் மருதமலை, கிளைச் செயலாளர்கள் வேலு, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை அவைத் தலைவர் குப்பன் நன்றி கூறினார்.

Tags : Minister ,facilities ,constituency ,Arany ,
× RELATED பெட்ரோல், டீசல் விலையும்...