×

சத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் கோயில் மடப்பள்ளி இடிக்க எதிர்ப்பு பக்தர்கள் சாலை மறியல்

நாகை,மார்ச்18: நாகையில் தீயணைப்பு வளாகம் உள்ளே இருக்கும் சத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் கோயில் மடப்பள்ளியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே வெளிப்பாளையம் தீயணைப்பு நிலையம் உள்ளது. பல ஆண்டு காலம் பழமை வாய்ந்த இந்த தீயணைப்பு நிலையத்தின் கட்டிடம் பழுது ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த அலுவலகம் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி தற்சமயம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் சத்குரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். கோயிலின் பின்புறம் பாஜ சார்பில் புதிதாக மடப்பள்ளி கட்டிதரப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த உயர்அதிகாரிகள் கட்டி முடிக்கப்படவுள்ள புதிய தீயணைப்பு அலுவலகத்தை பார்வையிட்டனர். அப்போது தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருப்பது தெரியவந்தது. இதனால் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றிட வேண்டும் என்று உயர்அதிகாரிகள் உத்தரவிட்டு சென்றனர். இதன்பேரில் நேற்று தீயணைப்பு நிலைய வளாகத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வருவாய்துறையில் இருந்து அதிகாரிகள் வருவதற்கு காலதாமதம் ஆனதால் மாலை நேரத்திற்கு பின்னர் சர்வேயர் உதவியுடன் இடங்கள் அளவீடு செய்யப்பட்டது. தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களை தாமாக முன்வந்து அகற்றி கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது.

வளாகத்தில் உள்ள சம்ஹாரமூர்த்தி கோயில் மடப்பள்ளியை இடிக்க பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இதைஅறிந்த பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி மடப்பள்ளியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிப்போம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பின்னர் பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி கோயிலின் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பப்ளிக்ஆபீஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டிஎஸ்பி முருகவேல் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி உத்தரவிட்டார். பின்னர் ஆர்டிஓ பழனிகுமார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

மறியல் போராட்டத்தை கைவிட்டு கோயிலுக்கு வந்து சமாதானபேச்சுவார்த்தை நடத்தும்படி கூறினார். இதில் சமாதானம் அடைந்த பக்தர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கோயிலுக்கு சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் இன்று(18ம் தேதி) ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதன்பின்னர் பக்தர்கள் கோயிலில் இருந்து கலைந்து சென்றனர்.

Tags : Devotees ,demolition ,road ,Sadguru Samharamurthy Swamy Temple Madapalli ,
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...