×

தொடர்ந்து பணி வழங்க கோரி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள் போராட்டம்

நாகை,மார்ச்18: தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தி நாகை அருகே தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை அருகே பனங்குடியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணியை வரும் 31ம் தேதியுடன் முடிக்க ஆலை நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் உறுப்பினர்கள் 94 பேருக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும்.

பணி இழப்பிற்கு ஆளாகும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த இருந்தனர். இந் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் சார்பிலும் நடந்த பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையில் இது நாள் வரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தி கடந்த மாதம் 26ம் தேதி ஆலை வளாகத்தில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது நாகூர் போலீசார் கலெக்டரின் அனுமதியுடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினர்.

இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். ஆனால் இதுநாள் வரை எந்தவித அமைதி பேச்சு வார்த்தையும் நடைபெற வில்லை. எனவே தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தியும், பணியை இழப்பவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் நேற்று முதல் ஆலை வளாகத்தில் காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இது குறித்து சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: 94 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தியும், பணி இழப்பவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் ஆலை நிர்வாகம் எங்கள் கோரிக்கைகளை ஏற்க இதுவரை முன்வரவில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தை நடத்த வசதியில்லாமல் துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறோம். இருப்பினும் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

Tags : Oil refinery workers ,
× RELATED எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை...