×

ஆம்புலன்சுடன் மருத்துவக்குழு முகாம் எல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம் நுழையும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிப்பு

ராஜபாளையம், மார்ச் 18: விருதுநகர் மாவட்ட எல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள விருதுநகர் மாவட்ட எல்லையான சொக்கநாதன் புத்தூர் காவல் சோதனை சாவடி வழியாக கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து, கார், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் கடந்து செல்லும். மற்ற மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் விருதுநகர் மாவட்டத்திற்குள் வருவதை தடுக்கும் வண்ணம், நேற்று முன்தினம் இரவில் இருந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு அரசு மருத்துவர், இரண்டு சுகாதார ஆய்வாளர்கள், ஒரு மருந்தாளுனர் மற்றும் நான்கு சுகாதார பணியாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் இந்த இடத்தில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

லைசால் எனப்படும் தடுப்பு மருந்தை வாகனங்களில் மக்கள் கை படும் இடங்களில் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பு பணிகளை கலெக்டர் கண்ணன், எஸ்.பி பெருமாள், டி.எஸ்.பி. நாகசங்கர், சிவகாசி சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், மருத்துவ கல்லூரி தலைவர் ரேவதி, வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரபிரபு, தாசில்தார் ஆனந்தராஜ், நகர் நல அலுவலர் சரோஜா, நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். வாகனங்களில் செல்லும் பயணிகளிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகயைில், விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளே வரும் அனைத்து வாகனங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராஜபாளையம் அரசு மருத்துவமனை கூடுதல் படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை புகார் எதுவும் வராத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வில்லிபுத்தூரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு நடத்திய சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும் அவர் வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு கொரோனா தொற்று அதிகம் உள்ள கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு திட்டமிட்ட அல்லது மிகவும் அவசியமான பயணத்தை தவிர சாதாரணமாக செல்வதை தவிர்க்க வேண்டும். பங்குனி மாதம் நடைபெற உள்ள பொங்கல் உள்ளிட்ட திருவிழாக்களை தள்ளி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. கட்டாயம் நடத்த வேண்டும் என்றால் சாஸ்திரத்துக்கு மிக குறைந்த கூட்டத்தை வைத்து திருவிழாவை நடத்த வேண்டுகிறோம் என்றார்.

Tags : camp camp border ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ