×

ராஜபாளையத்தில் பரபரப்பு வீட்டில் கல் எறிந்த போதை ஆசாமி தலையில் கல்லை போட்டு கொலை

ராஜபாளையம், மார்ச் 18: அருப்புக்கோட்டை அருகே குடிபோதையில் வீட்டில் கல் எறிந்த கட்டிட தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். ராஜபாளையம் எம்.ஆர்.நகரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் சமுத்திரபாண்டி (43). கட்டிட தொழிலாளி. மனைவியை பிரிந்த நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் சுற்றித்திரிந்து வந்தார். இவருக்கு சொந்தமான வீடு அம்பலப்புளி பஜார் கருப்பஞானியார் கோயில் தெருவில் உள்ளது. இவரது உறவினர் வெள்ளைப்பாண்டி, பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் வெள்ளைப்பாண்டி பொதுச்சுவர் கட்டினார். இது தொடர்பாக இருவரிடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த சமுத்திரபாண்டி, வெள்ளைப்பாண்டியின் வீட்டின் முன் தகராறு செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் விலக்கிவிட்டு அனுப்பி வைத்தனர். மீண்டும் நள்ளிரவு வந்த சமுத்திரபாண்டி, வெள்ளைப்பாண்டியின் வீட்டின் மீது கற்களை வீசிவிட்டு ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வெள்ளைப்பாண்டி, அவரை தேடி சென்றார். நகர் தெற்கு காவல்நிலையம் பின்புறம் உள்ள ஜவுளிக்கடை பஜார் பகுதியில் குடிபோதையில் சமுத்திரபாண்டி சுற்றி திரிந்தார். அவரை தாக்கி கீழே தள்ளி தலையில் கல்லை தூக்கி போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சமுத்திரபாண்டி உயிரிழந்தார். தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமுத்திரபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து வெள்ளைபாண்டியை கைது செய்தனர்.

Tags : Asami ,parabharam home ,Rajapalayam ,
× RELATED மினிவேன் மீது பைக் மோதி ஆசாமி பலி