×

காரியாபட்டி அருகே ஆத்திகுளத்தை முடக்கியது மர்மக்காய்ச்சல் கால்வலி, மூட்டு வலி, தலைவலியுடன் மக்கள் அவதி

காரியாபட்டி, மார்ச் 18: காரியாபட்டி அருகே மர்மக்காய்ச்சலால் கிராமமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். காரியாபட்டி அருகே உள்ள தோப்பூர் ஊராட்சி ஆத்திக்குளம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கால்வலி, மூட்டு வலி, தலைவலியுடன் காய்ச்சல் வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தற்போது காரியாபட்டி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேரும், மேலும் அருப்புக்கோட்டை, விருதுநகர் போன்ற நகரங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் நடமாடும் மருத்துவக்குழுவினர் ஆத்திக்குளம் கிராமத்தில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மேல் நிலைத்தொட்டியில் உள்ள குழாய் களில் வெடிப்பு ஏற்பட்டு நீர் கசிந்து பக்கத்தில் உள்ள சாக்கடையில் கலந்து செல்தல், வாறுகால் சரியான முறையில் இல்லாமல் கழிவுநீர் தெருக்களில் தேங்குதல் போன்ற காரணங்களால் இந்த காய்ச்சல் பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆத்திகுளம் குணாளன் கூறுகையில், ஊரே ஒட்டுமொத்தமாக மர்மமாக வந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தனர். என்னுடைய மனைவியை இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காரியாபட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளேன். ஊருக்கு வந்துள்ள டாக்டரை கேட்டால் கிராமத்தில் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை என்றும் அதனால் தான் காய்ச்சல் வருகிறது என்றும் கூறுகின்றனர் என்றார். ஆத்திகுளம் கந்தசாமி கூறுகையில், எங்கள் கிராமத்தில் வாறுகால் வசதி சரியாக இல்லை. இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் தெருக்களில் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. கிராமம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இரண்டு நாட்களாக நடமாடும் மருத்துவ வாகனத்தின் மூலம் முகாம் நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் தொடர்ந்து மருத்துவர்கள் குழு முகாமிட்டு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என்றார். பெருமாளக்காள் கூறுகையில், எங்கள் குடும்பத்தில் நான்கு பேருக்கு காய்ச்சல் வந்து விட்டது. விருதுநகர், அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியம் பார்க்கிறோம். வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் பார்க்கிறார்கள். இரண்டு நாளாக நிலவேம்பு கசாயம், கொசு மருந்து அடிப்பது போன்ற பணிகள் செய்தாலும், பெயரளவில் நடப்பதாக தெரிகிறது. முதியவர்களுக்கு காய்ச்சல் வந்து இறந்தும் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காய்ச்சலை தடுக்க வேண்டும் என்றார்.

Tags : Kariyapatti ,Attikulam ,
× RELATED காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி...